உங்கள் உடலில் உள்ள சிங்க், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய கனிமச் சத்துக்கள் உங்களின் தினசரி செயல்பாடுகள் சிறிதும் பிசிறின்றி நடைபெற பெரிதும் உதவி புரிபவை. அச்சத்துக்கள் குறையும் போது உடலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இப்போது பார்க்கலாம்.
1. திடீரென கால் அல்லது பாதங்களில் உண்டாகும் வலியுடன் கூடிய தசைப் பிடிப்பு. இது பொதுவாக இரவில் அல்லது உடற்பயிற்சிக்குப் பின் தோன்றும். தசைகளின் சுருங்கி விரியும் தன்மையை ஒழுங்கு படுத்தும் மக்னீசியம் அல்லது கால்சியம் சத்தின் குறைபாடே இதற்கு காரணமாகும். மேலும் இக்கனிமங்களின் குறைபாடுகளே எலும்புகள் வலுவிழந்து உடைபடவும் காரணிகளாகின்றன.
2. இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் பெற்ற பின்னும் உடல் சக்தியின்றி சோர்வுடன் காணப்படுவது உண்டு. இது சக்தியை உற்பத்தி செய்யும் மெட்டபாலிஸ செயல்பாடுகள் சரிவர நடைபெறாததை சுட்டிக்காட்டுவதாகும். சக்தியை உற்பத்தி செய்வதில் மக்னீசியம், சிங்க் ஆகிய இரண்டு சத்துக்களும் பெருமளவில் உதவி புரிகின்றன. இவற்றில் குறை ஏற்படும்போது உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாவது இயற்கை.
3. விரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் காணப்படுவது உடலுக்குள் சிங்க் சத்து சரிவர உறிஞ்சப்படவில்லை என்பதை குறிக்கும். அல்லது, உண்ணும் உணவுகளிலிருந்து சிங்க் போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும். சிங்க் சத்து குறையும்போது, அடிக்கடி சளி பிடிக்கும். உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். சிறு காயங்கள் கூட குணமடைய நீண்ட நாட்களாகும். நாவின் ருசியறியும் குணத்திலும் வாசனை அறியும் திறனிலும் குறை ஏற்படுத்தும் சிங்க் குறைபாடு.
4. உடலில் நரம்பு மண்டல இயக்கங்களை ஒழுங்கு படுத்தவும், உறக்கத்திற்கு உதவக்கூடிய மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்திக்கு உதவி புரியவும் துணையாக இருப்பது மக்னீசியம் சத்து. இதில் குறை ஏற்படும்போது, உடல் ஓய்வு மற்றும் உறக்கம் பெறுவதில் சிரமம் உண்டாகும். வழக்கமாக உணரப்படும் சத்தங்களும் வெளிச்சமும் கூட மிக அதிகமாக உணரப்பட்டு நரம்புகள் படபடக்கும். மூட் ஸ்விங் ஆகும். மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உண்டாகும். மூளை அமைதியாகவும், கவனத்துடனும் செயல்புரிய மறுக்கும்.
5. விரல் நகங்கள் மற்றும் முடியின் நுனிப்பகுதி உடைந்து காணப்படுவதற்கு உடலில் சிங்க் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளதே காரணமாகும். சிங்க் மற்றும் கால்சியம், கெராட்டின் வடிவமைப்பிற்கும் முடியின் வேர்க்கால் பகுதியின் அருகிலுள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுவதற்கும் உதவுகின்றன.
6. உடலில் கால்சியம் சத்து குறையும் போது நரம்பு மண்டலம் வழியாக மின்காந்த அலைகள் கடத்தும் கட்டளைகளில் இடையூறு உண்டாகும். அப்போது விரல்கள் அல்லது பாதங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி உண்டாகும்.
மேற்கூறிய அறிகுறிகளைக் காணும்போது, உடலில் கனிமச் சத்துக்களின் அளவைக் காட்டும் பரிசோதனையை, மருத்துவரின் பரிந்துரையுடன், மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவது நலம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.