

குளிர்காலம் சில குறிப்பிட்ட உடல்நல கேடுகளைத் தருகிறது. சளி, இருமல் போன்றவைகள் அச்சுறுத்தல் இல்லாத விரைவில் சரியாகும் பொதுவான பாதிப்புகளாகும். ஆனால், பக்கவாதம் போல் முகதசைகளை பாதிக்கும் முகவாதம் குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முகவாதமும், பக்கவாதமும் ஒன்றல்ல.
பக்கவாதம் - மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக் கசிவால் ஏற்படுவதாகும்.
முகவாதத்தில் மூளையில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம் / அழற்சி / வைரஸ் தொற்று ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சனை என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக குளிர் காலங்களில் முதியவர்கள், நடுத்தர வயதினரில் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் "முகவாதம்" ஏற்படுவதைக் காணமுடிகிறது. முகவாதம் என்றால் என்ன மற்றும் காரணங்கள், எச்சரிக்கைகள் குறித்து திரட்டிய தகவல்கள் இங்கு.
முக வாதம் (Bell's Palsy) என்றால் என்ன?
முகத்தின் ஒரு பக்க தசைகள் பலவீனமாகி அல்லது இயங்காமல் போகும் நிலையே முக வாதம் எனப்படும். முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும் "முக நரம்பில்" (FACIAL NERVE) உள் காயம் ஏற்படுவது மற்றும் தொற்றுகள் மூலமும் Bell’s Palsy என்ற நரம்பு அழற்சியாலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இது தற்காலிகமானது. தகுந்த நேரத்தில் கால தாமதமின்றி பெறும் சரியான சிகிச்சை இந்த பாதிப்பை சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் குணமாக்கிவிடும்.
முக வாதம் அறிகுறிகள்
ஒரு பக்கம் சாய்ந்தது போல முகத்தின் தோற்றம், கண் சரியாக மூட முடியாமை, வாய் ஓரமாக சிரிப்பு, பேசுதல், சாப்பிடுதல் போன்றவற்றில் சிரமம், அறியாமலே எச்சில் சொட்டுவது, காதிற்கு அருகே வலி, ருசி உணர்வு குறைதல், கண் உலர்தல் அல்லது கண்களிலிருந்து அதிக நீர் வடிதல் போன்றவை.
முகவாதம் ஏற்படும் காரணங்கள்
முக நரம்பில் வைரஸ் (Herpes simplex virus) போன்றவைகளால் ஏற்படும் அழற்சி, அதிகமான மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வு, தீவிர நீரிழிவு, தாங்க முடியாத குளிர் காற்று தாக்கம் ஆகியவை காரணங்களாகின்றன.
என்னென்ன முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கலாம்
படுக்கும் போது பாய், தலையணை, கம்பளம், விரிப்பு போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னங்களை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நேரடியாக டைல்ஸ்/ மார்பிள்/ கிரேனைட் தரைகளில் தலையை வைத்துப் படுப்பது முகவாதத்தைக் கொண்டு வரும் என எச்சரிக்கின்றனர். இதனால் முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கார், பேருந்து, ரயில் பயணங்களில் செல்லும் போது அதிக நேரம் குளிர்ந்த வாடைக் காற்று காதுகள் மற்றும் கன்னப்பகுதிகளில் படுமாறு செல்வது முகவாதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தகுந்த பாதுகாப்புகளுடன் செல்லவும் அல்லது கூடுமானவரை குளிரில் ஜன்னல் பயணத்தை தவிர்க்கவும்.
வீட்டிலும் கூட உறங்கும் போது நேரடியாக ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது. போதிய ஓய்வு எடுத்து தேவையின்றி வரும் மன அழுத்தத்தை குறைக்கவும்.
இதன் சிகிச்சைகள்
முகவாதம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். அவரின் கண்காணிப்பில் எடுக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் நரம்பின் அழற்சியை குறைக்கும்.
கண் எரிச்சல் தவிர்க்க கண் சொட்டு மருந்துகள் / கண்ணை மூடும் பாதுகாப்பு பயிற்சிகள், முக தசை மசாஜ், மெதுவான முக பயிற்சிகள், கண் மூடுதல், கன்னத்தை ஊதுதல், புருவத்தை உயர்த்துதல் போன்றவை கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் பராமரிப்பாக வெளியே செல்வதை தவிர்த்து ஓய்வு எடுக்கவும். மிக குளிர் காற்றைத் தவிர்க்கவும்.
எப்போது அவசரமாக மருத்துவரை காண வேண்டும்?
உடலில் மற்ற இடங்களிலும் பலவீனம், பேச முடியாத நிலை, தலைசுற்றல் போன்ற அறிகுறிகளுடன் முக வாதம் திடீரென்று உடன் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். ஏனெனில், இது ஸ்ட்ரோக் போன்ற அவசர நிலைகளின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
முக வாதம் எத்தனை நாளில் குணமாகும்?
முகவாதம் தகுந்த சிகிச்சையில் நிச்சயம் குணமாகும் என்பதால் அச்சம் வேண்டாம். மனதில் நம்பிக்கை மட்டுமே தேவை. பெரும்பாலானவர்கள் 3–6 வாரங்களில் முன்னேற்றம் காண்கிறார்கள். 3 மாதங்கள் சிகிச்சைக்கு பின் முழு குணம் பெறலாம். சிலருக்கு அதிக நாட்கள் பிடிக்கலாம். ஆனால், கவலை வேண்டாம். தற்போது மருத்துவ வசதிகள் எதையும் குணப்படுத்தும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)