

நக சொத்தை(Onychomycosis) ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பூஞ்சை தொற்றாகும். இது நகங்களின் மென்மையான திசுக்களை பாதிக்கிறது. சரியான சுகாதாரமின்மை, மோசமான காலணிகள் அல்லது நகங்களில் காயம் போன்றவையும் நக சொத்தைக்கு வழிவகுக்கும். நக சொத்தைக்கு சிகிச்சையானது அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்தது. பூஞ்சை தொற்று மீண்டும் வருவதைத் தடுக்க சிகிச்சையுடன் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுவதும் அவசியம்.
1. அறிகுறிகள்:
நகம் மஞ்சள், வெள்ளை அல்லது பழுப்பு நிறமாக மாறுதல்.
நகங்கள் தடித்துப் போய் வெட்டுவதற்கு கடினமாக இருப்பது.
உடையக்கூடிய தன்மை, வலி, சில சமயம் துர்நாற்றமும் இருக்கலாம்.
2. காரணங்கள்:
இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, ஒரு நகத்திலிருந்து மற்றொரு நகத்திற்கு துண்டுகள் அல்லது ஷவர் போன்ற ஈரமான மேற்பரப்புகளில் இருந்து பரவக்கூடும். வயது, நகங்களில் ஏற்படும் அதிர்ச்சி, இறுக்கமான காலணிகளை அணிவது, நீரிழிவு, எச்.ஐ.வி போன்ற சில மருத்துவ நிலைமைகள் ஆகியவை ஆபத்தை அதிகரிக்கும் காரணிகளாகும்.
3. சிகிச்சை முறைகள்:
வாய்வழிப் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்:
இவை பொதுவாக மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். இந்த மருந்துகள் புதிய, ஆரோக்கியமான நகம் வளர உதவுகின்றன. சிகிச்சை காலம் பொதுவாக சில மாதங்களாகும். கல்லீரல் நோய் அல்லது இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.
பூஞ்சை எதிர்ப்பு கீரீம்கள்:
யூரியா அடங்கிய கிரீம்கள் போன்றவற்றை நகத்தை மெலிதாக்க பயன்படுத்திய பிறகு, எபினகோனசோல் (efinaconazole) போன்ற பூஞ்சை எதிர்ப்பு கிரீம்களை பூசுவது மருந்து ஆழமாகச் செல்ல உதவும். வாய்வழி மற்றும் மேல்பூச்சு சிகிச்சைகளை இணைப்பது பெரும்பாலும் சிறந்த அணுகுமுறையாகும்.
4. வீட்டு வைத்தியம் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:
லேசான பாதிப்புகளுக்கு வீட்டு வைத்தியம் உதவும். ஆனால், தொற்று தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். நக சொத்தையை குணப்படுத்த சுத்தமான பராமரிப்பு, மிதமான மற்றும் இயற்கையான சிகிச்சைகளும் பலன் தரும். கை கால்களை கழுவியதும் நன்கு உலர விடவும். சுத்தமாகவும் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது சொத்தை வருவதை தவிர்க்கும்.
வினிகரின் அமிலத்தன்மை பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வெதுவெதுப்பான நீரில் வினிகரை 1:1 என்ற விகிதத்தில் கலந்து பாதிக்கப்பட்ட நகங்களை அதில் சிறிது நேரம் ஊற வைக்கலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை சில நிமிடங்கள் எலுமிச்சை துண்டில் சிறிதளவு உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட நகங்களில் வைப்பது எளிய மற்றும் பயன் தரும் வழியாகும்.
டீ ட்ரீ ஆயிலுக்கு பூஞ்சை எதிர்ப்புத் திறன்கள் உள்ளன. இதை பாதிக்கப்பட்ட நகங்களில் பூசலாம்.
பூண்டை அரைத்து வினிகருடன் கலந்து பயன்படுத்தலாம்.
நகங்களை சீராக வெட்டுவது நல்லது. நகங்களை மிகச் சிறியதாக வெட்டுவதோ அல்லது நகங்களுக்குள் அழுத்தம் கொடுப்பதோ சொத்தையே மோசமாக்கும். நகங்களை நேராக வெட்டி, விளிம்புகளை மென்மையாக்கவும். நகம் வெட்டும் கருவியை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் கிருமி நீக்கம் செய்யவும்.
பொருத்தமான காலணிகளை அணியவும். மேலும் ஈரமான அல்லது வியர்வை நிறைந்த சாக்ஸ்களை மாற்றவும்.
நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் சுய சிகிச்சை செய்வதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகி கலந்தாலோசிப்பது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)