நமது முன்னோர்கள் வெறும் காலுடன் நடந்து (Barefoot walking) ஆரோக்கியமாக இருந்து வந்தார்கள். குறிப்பாக மூட்டு வலி, பாத வெடிப்பு போன்ற எந்த கால் மற்றும் இடுப்பு சம்பந்தமான வலிகளை அவ்வளவாக அனுபவித்தது கிடையாது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
ஆனால், இப்போது நாம் அன்றாடம் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் காலணிகளை அணிகிறோம். இது நம் உடலுக்கும், பூமிக்கும் இடையேயான நேரடி மின் தொடர்பைத் துண்டித்துவிடுகிறது.
உங்கள் உடலை பூமியின் மேற்பரப்புடன் வெறுங்காலுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துவதே 'எர்திங்' (Earthing) அல்லது 'கிரௌண்டிங்' (Grounding) என்பதாகும். பூமிக்கு இயற்கையாகவே ஒரு லேசான எதிர்மறை மின்சக்தி (Negative Electrical Charge) உள்ளது. நாம் வெறுங்காலுடன் மண்ணிலோ, புல்லிலோ, மணலிலோ நடக்கும்போது, இந்த எதிர்மறை மின் சக்தி நம் உடலில் உறிஞ்சப்படுகின்றன. இதுவே, 'எர்திங்' என்பதன் அறிவியல் விளக்கம்.
தற்போதைய வாழ்க்கை முறையாலும், சுற்றுச்சூழல் காரணங்களாலும், நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் மூலக்கூறுகள் உருவாகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நேர்மறை மின்னூட்டம் கொண்டவை. இவை, உடலில் வீக்கம், வலி மற்றும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாகின்றன.
பூமியிலிருந்து நாம் பெறும் எதிர்மறை மின்னூட்டங்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இந்த எதிர்மறை எலக்ட்ரான்கள் உடலில் உள்ள நேர்மறை மின்னூட்டம் கொண்ட ஃப்ரீ ரேடிக்கல்களை ஈடுகட்டுகின்றன . இதன் மூலம், வீக்கம் குறைவதோடு அது தொடர்பான நச்சுகள் மற்றும் பாதிப்புகளை நீங்குகின்றன.
ஆரோக்கிய நன்மைகள்
எர்திங் வீக்கத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆஸ்துமா, இதய நோய் போன்ற வீக்கத்துடன் தொடர்புடைய பல நோய்களுக்கு நல்லது.
இது கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் ஒழுங்குபடுத்தி, ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நாள்பட்ட வலி மற்றும் சோர்வு குறையவும் இது உதவலாம் என்று சொல்லப்படுகிறது.
இரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையைக் குறைத்து, இரத்த சிவப்பணுக்கள் ஒன்றுகூடுவதைத் தடுத்து, இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
செய்யும் முறை:
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் புல், மண் அல்லது மணல் போன்ற இயற்கையான மேற்பரப்பில் வெறுங்காலுடன் நடப்பது எளிமையான மற்றும் சிறந்த வழியாகும். கடற்கரை மணலில் நடப்பது அல்லது தோட்டத்தில் வேலை செய்வது கூடுதல் பலனளிக்கும். இந்த எளிய நடைமுறையின் மூலம், நாம் இயற்கையுடன் மீண்டும் இணைவதுடன், உடலின் நச்சுக்களை நீக்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)