பாலிவுட் நட்சத்திரங்களின் 'Weight Loss' ரகசியம்! - GLP-1: ஆபத்தா?

GLP-1
GLP-1Img credit: AI Image
Published on

உடல் எடையைக் குறைப்பதில் தற்போதைய மருத்துவ உலகில் GLP-1 (Glucagon-like Peptide-1) அடிப்படையிலான மருந்துகள் ஒரு புரட்சியாகக் கருதப்படுகின்றன. இது கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியாவில் இதன் காப்புரிமை முடிந்து, தற்போது மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

GLP-1 என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது?

GLP-1 (Glucagon-Like Peptide-1) என்பது நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன் ஆகும். நாம் உணவு உட்கொள்ளும் போது குடலில் இருந்து இது சுரக்கிறது. இந்த ஹார்மோன் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு, இது பசியை குறைக்கிறது. இதன் விளைவாக, நாம் சீக்கிரமே வயிறு நிறைந்த உணர்வை அடைகிறோம். மேலும், வயிறு காலியாகும் வேகத்தை மந்தமாக்குகிறது.

இந்த இயற்கை ஹார்மோனின் செயல்பாட்டைப் போலவே GLP-1 மருந்துகள் செயல்படுகின்றன. இம்மருந்துகள் மூளையில் உள்ள பசி கட்டுப்பாட்டு மையங்களை பாதித்து, உணவு உண்ணும் ஆசையைக் குறைக்கின்றன. மேலும், உணவு செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவுகின்றன. இதனால் ஒருவரின் தினசரி கலோரி உட்கொள்ளல் குறைந்து, உடல் எடை மெதுவாக குறைகிறது. அதே சமயம், இம்மருந்துகள் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகின்றன. எனவே, இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

யார் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்?

GLP-1 மருந்துகள் அனைவருக்கும் தேவையானவை அல்ல. பொதுவாக, உடல் நிறை குறியீடு (BMI) 30 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள், BMI 27-க்கு மேல் இருந்து, அதனுடன் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்கள் உள்ளவர்கள் இம்மருந்துகளை பயன்படுத்தலாம். உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டும் போதுமான பலன் கிடைக்காதவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இம்மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலையில் கண் முழிச்சதும் மொபைல தேடுறீங்களா? எமன் உங்க பின்னாடியே நிக்கறார்... உஷார்!
GLP-1

பக்கவிளைவுகள் என்ன?

இந்த மருந்துகள் பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும், சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். வாந்தி, வாந்தியுணர்வு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும். குறிப்பாக, சர்க்கரை நோய் மருந்துகளுடன் சேர்த்து எடுத்தால் இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைவாகும் அபாயமும் உள்ளது.

மேலும், சிலர் இந்த மருந்துகளை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். தைராய்டு புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட ஹார்மோன் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். நீண்டகாலப் பயன்பாடு மருத்துவ கண்காணிப்பில் இருப்பது சிறந்தது.

GLP-1 மருந்துகள் உடல் எடை குறைப்பில் ஒரு முக்கியமான மருத்துவ முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், முழுமையான பலனைப் பெற இந்த மருந்து மட்டும் போதுமானது அல்ல. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கையான உடற்பயிற்சி அவசியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com