

காலையில் கண் திறக்கும் அந்த நொடி முதல் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். கை தானாகவே மொபைலை தேடும். சிலருக்கு காப்பி இல்லாமல் நாள் தொடங்காது.
ஆனால் நம்முடைய உடல் அந்த நேரத்தில் வேறொன்றை எதிர்பார்க்கிறது அதை நாம் யாரும் நிறைவேற்றுவது இல்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேதம் ஒரு எளிய உண்மையை சொல்லிவிட்டது. நோய் வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட நோய் வராமல் தடுப்பதுதான் மிகவும் புத்திசாலித்தனம். அதற்கான ரகசியம் பெரிய மருந்துகளில் இல்லை நம்முடைய தினசரி பழக்க வழக்கங்களில் தான் உள்ளது.
அதிகாலை எழுவது வாழ்க்கையில் நாம் மறந்த பொக்கிஷம். ஒரு ஐடி ஊழியர் தன் வாழ்நாள் முழுவதும் சோர்வாகவே இருக்கிறேன் என்கிறார். அதற்கு ஒரு எளிய ஆலோசனை. 45 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து விடுங்கள், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கும். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு சுமார் மூன்று முப்பது முதல் ஐந்து முப்பது மணி வரை ஆயுர்வேதத்தில் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் எழுவது நமது உடலின் இயற்கையான கடிகாரத்துடன் ஒத்துப் போவதாக உள்ளது. இது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி மனத் தெளிவையும் உடல் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது
இரண்டாவதாக காலை எழுந்தவுடன் ஒரு கப் சூடான தண்ணீர் குடித்து வருவது செரிமானத்தை தூண்டும் மற்றும் உடலை ஊக்குவிக்கும். நாள் முழுவதும் லேசான ஒரு உணர்வைத் தரும். ஒரு எளிமையான பழக்கம் தான் ஆனால் இதன் விளைவு மிகவும் அளப்பரியது.
மூன்றாவதாக இருபதில் இருந்து 30 நிமிடம் நடைபயிற்சி செய்து வந்தால் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ரத்த ஓட்டம் சீராகும் மற்றும் மன அழுத்தம் குறையும்.
நான்காவது உணவு ஒரு மருந்து. இது மறந்து போன உண்மை. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் வாழ்க்கை நமது ஆயுள் காலத்தை வேகமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் காய்கறிகள், பழங்கள் கீரை இவை எல்லாம் நமக்கு உடல் நலத்தை தரும் பவர் ஹவுஸ். உட்கார்ந்து மெதுவாக உணவை மென்று சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உங்கள் உடல் உங்களுக்கு நன்றி கூறும்.
ஐந்தாவதாக மன அமைதி. நம் உடலுக்கு தேவையானது இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எனக்கு ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறது என்று சொல்கிறார்கள். தினமும் சிறிது நேரம் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வது மற்றும் மூச்சு பயிற்சி செய்வது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
ஆறாவதாக நல்ல தூக்கம் ஒரு வரப் பிரசாதம். இது மறுக்க முடியாத தேவைகளில் ஒன்று. லேட் நைட் காலிங் எண்ட்லெஸ் வீடியோக்கள் இதுதான் இன்றைய காலப்போக்கு. ஆனால் அதன் விளைவு சோர்வு, கவன குறைவு உடல் பாதிப்பு மட்டுமே.
நல்ல தூக்கம் கிடைத்தால் நினைவாற்றல் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் உயரும். சில நேரங்களில் மொபைலை விட தூக்கம் மிகவும் முக்கியமானது.
நமது வாழ்க்கை முறையை மாற்ற பெரிய முடிவுகளை தேடுகிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அதிகாலை எழுதல், வெந்நீர் குடித்தல், நடைப்பயிற்சி, நல்ல உணவு, மன அமைதி, போதுமான தூக்கம் போன்ற சிறிய பழக்க வழக்கங்களால் தான் வாழ்க்கை மாறுகிறது இதுதான் நிஜம்.
இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள். நாளை முதல் முயற்சி செய்து பாருங்கள். முடியாதது ஒன்றும் இல்லை.
கடைசியாக நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி என்ன தெரியுமா? நலம்தானா என்ற கேள்வி தான். அந்தக் கேள்விக்கான விடை உங்கள் உடலும் மனமும் நலம்தான் என்று பதில் சொன்னால், அதுவே உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியை குறிக்கும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினசரி இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நம் ஆரோக்கியமும் நம் உடல் நலமும் நம் கையில் தான் உள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)