
குளூட்டாதையான்கள் நமது உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும், முகப்பரு, சரும சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைத்து இளமையாக தோற்றமளிக்க வைப்பதற்கும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தி உடல் ஆரோக்கியமாகத் திகழவும் உதவுகின்றன. குளூட்டாதையான்கள் நிறைந்த உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
மனித உடலின் செல்களில் குளூட்டாதையான்கள் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், வயதாகும் போதும், ரசாயனம் கலந்த சத்தில்லாத உணவை உண்ணும் போதும், நாள்பட்ட நோய்கள் மற்றும் மன அழுத்தமும் இதனுடைய அளவு இயற்கையாகவே குறையச் செய்கின்றன. எனவே, குளுட்டோதையன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உண்பது அவசியம் ஆகிறது.
குளூட்டாதையான் நிறைந்த உணவுகள்:
1. மஞ்சள்: உணவிற்கு நிறமும் சுவையும் சேர்க்கும் மஞ்சள், உடலின் செல்களுக்கு குளூட்டாதையானின் அளவை அதிகரிக்கிறது. எனவே, தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
2. பாதாம்: தினமும் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை ஊறவைத்து காலை உணவாக உண்ணலாம். மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் உடலில் டிஎன்ஏ சேதத்தை குறைக்கிறது.
3. வெண்டைக்காய்: வெண்டைக்காய் விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன. கெட்ட மூலக்கூறுகளால் உடலுக்கு ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன.
4. பசலைக்கீரை: பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை குளூட்டாதையானின் சத்தையும் கொண்டிருக்கிறது. எனவே, இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. முட்டைக்கோஸ்: அதிக சத்துக்கள் நிறைந்த முட்டைக்கோசை பச்சையாகவோ, சூப்புகளிலோ அல்லது சமைத்தோ, பொரியல் செய்தோ உண்ணலாம்.
6. வால்நட்ஸ்: இதயத்திற்கு ஆரோக்கியமான வால்நட்டுகள் நல்ல கொழுப்பை வழங்குவதோடு உடலில் குளூட்டாதையானின் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன. எனவே, இதை தினமும் சிறிதளவு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. ஆரஞ்சு/ பப்பாளி/ ஸ்ட்ராபெரி திராட்சை பழம்:
விட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்ச், பப்பாளி, ஸ்ட்ராபெரி, திராட்சை, போன்றவை குளூட்டாதையான்கள் நிறைந்தவை. உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உண்ணலாம்.
8. வெள்ளைப் பூண்டு: தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் குளூட்டாதையானின் அளவு அதிகரிக்கும்.
9. அவகேடோ: 'வெண்ணெய்ப் பழம்' என்று அழைக்கப்படும் அவகேடோ செல்களின் சேதத்தை குறைக்க உதவுகிறது. குளூட்டாதையானின் அளவை அதிகரிக்கும்.
10. கிரீன் டீ: இவற்றில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால், உடலில் குளூட்டாதையானின் அளவை அதிகரிக்கிறது. எனவே, தினமும் காபிக்கு பதிலாக ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.
11.பிரக்கோலி: இந்தக் காய்கறி உடலில் குளூட்டாதையானை ஒருங்கிணைக்கும் கல்லீரலின் திறனை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, வாரத்தில் மூன்று தினங்களாவது இந்தக் காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
12. வெங்காயம்: இதில் சல்பர் நிறைந்திருப்பதால் உடலில் இயற்கையாகவே குளூட்டாதையானின் அளவை அதிகரிக்கும்.
13. முட்டை/ மோர்: இவற்றில் முட்டையை வாரத்தில் நான்கு நாட்களாவது உண்ண வேண்டும். மோர் தினமும் அருந்த வேண்டும். இவை குளூட்டாதையானின் அளவை அதிகரிக்க செய்கின்றன.
14. இஞ்சி, நெல்லிக்காய், துளசி போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மெலிந்த இறைச்சி வகைகளிலும் குளூட்டாதையான் நிறைந்துள்ளது. இவற்றையும் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)