
பொதுவாக, விலங்குகள் விதவிதமான பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டிருக்கின்றன. அதில் சில வகை விலங்குகள் ஓடவே தெரியாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு உயிர் வாழ ஓட வேண்டிய அவசியம் இல்லாதிருக்கலாம் அல்லது இயற்கையில் ஓடுவதற்குத் தேவையான உடலமைப்பை அவை பெறாமலிருக்கலாம். வேகமாக ஓடி எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைப்பதை விட இருந்த இடத்திலேயே அமைதியாக இருந்துவிடுவது பாதுகாப்பானது என்ற நினைப்பும் அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எது எப்படியோ, இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஐந்து வகை விலங்குகள் ஓடத் தெரியாமல் எவ்வாறு வாழ்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
1. ஸ்லோத்ஸ் (Sloths): ஸ்லோத்கள் மிக மெதுவாக நகரக் கூடியவை. ஓடுவதற்கு ஏற்ற உடலமைப்பை இவை பெற்றிருக்கவில்லை. மத்திய மற்றும் சவுத் அமெரிக்காவில் காணப்படும் ஸ்லோத் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மரங்களின் மேல் தலை கீழாகத் தொங்கியபடியே கழிக்கின்றன. அதன் பலமில்லாத கால் தசைகள் மற்றும் கால்களிலுள்ள நீண்டு வளைந்த நகங்கள் ஆகியவை ஸ்லோத்தை ஓட முடியாத ஓர் உயிரினமாக ஆக்கியுள்ளன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க அது உருமாறி, ஊர்ந்து சென்றே ஒளிந்துகொள்ளும். ஸ்லோத் தரையில் இருக்கும்போது மணிக்கு 0.03 மைல் என்ற வேகத்திலேயே நகரும். மரத்தின் மேலிருந்து வாரத்தில் ஒரு முறை மட்டும் 'பூப்' போவதற்கு கீழிறங்கி வரும் என்று கூறப்படுகிறது.
2. நத்தை (Snail): நத்தை நடக்கவோ, ஓடவோ, குதிக்கவோ முடியாத ஓர் பிராணி. இது சளி போன்ற ஒரு திரவத்தை உற்பத்தி செய்து அதன் மீது தசையினால் ஆன கால்களால் உராய்வின்றி வழுக்கிக் கொண்டு ஊர்ந்து செல்லும். நத்தையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 0.03 மைல் மட்டுமே. இது தனது பாதுகாப்புக் கவசத்தை (Shell) முதுகில் சுமந்து செல்ல வேண்டியிருப்பதும் ஓட முடியாமைக்கு இன்னொரு காரணம். இரவு நேரங்களில் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கும் நத்தை, உடல் உலர்ந்து போகாமலிருக்க ஈரமான சுற்றுச் சூழலையே விரும்புகிறது.
3. ஸ்டார் ஃபிஷ்: கடல்வாழ் உயிரினமாக இருந்தபோதும், இதற்கு மீனைப் போல நீந்தவோ, ஓடவோ முடியாது. மேலும், எலும்புகளாலான கால்களும், உடல் இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் மூளையும் இதற்குக் கிடையாது. இதன் கைக்கு அடியில் நூற்றுக்கணக்கில் சிறிய குழாய் போன்ற கால்கள் உள்ளன. அவை நீர் வாஸ்குலர் அமைப்பின் உதவியால் உணவு மற்றும் கழிவின் போக்குவரத்தையும், சுவாசத்தையும் நடத்திக் கொள்கின்றன. இதன் ஊர்ந்து செல்லும் வேகம் ஒரு செகண்டிற்கு 0.01 மீட்டர் ஆகும்.
4. ஆமை (Turtle): நிலத்தில் வாழும் ஆமை மெதுவாக நடந்து செல்லும். ஆனால், அதனால் ஓட முடியாது. அதன் முதுகிலிருக்கும் கனமான ஓடு அதற்கு சிறப்பான பாதுகாப்பு கொடுக்கும். அதை சுமந்து கொண்டு ஓடுவதென்பது ஆமைக்கு இயலாத ஒன்று. அவற்றின் குட்டையான, வலுவான கால்கள் தப்பி ஓடுவதற்கெல்லாம் உதவாது. நீர்வாழ் ஆமை, நீருக்குள் சிறிது வேகமாக நீந்தும். தரைக்கு வந்து விட்டால், தரைவாழ் ஆமையின் அதே மெதுவான நடைதான். ஆமையின் சராசரி வேகம் மணிக்கு 0.2 மைலை விட குறைவுதான்.
5. மண்புழு: பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட, நீண்ட, முதுகெலும்பில்லாத உயிரினம் மண்புழு. உடலில் கால்களோ விரல் அமைப்போ கிடையாது. அதனால் ஓட முடியாது. அதற்குப் பதில், உடல் தசையை சுருக்கியும், நீட்டியும் மண்ணிற்குள் ஊர்ந்துகொண்டிருக்கும். இதன் மூலம் மண் காற்றோட்டமும் வளமும் பெறும். மண்ணிற்குள், மண்புழு மணிக்கு 27 அடி தூரம் நகர்ந்து செல்லக்கூடியது. பூமிக்கடியில் வாழ்வதே இதற்கு பாதுகாப்பு பெறவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் உதவும். சுற்றுச்சூழலின் சமநிலையான அமைப்பிற்கு மண்புழு சிறந்த முறையில் உதவும்.