
நீரழிவு நோய் வந்தவர்கள் இனிப்புடன் பழச்சாறுகளையும் முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். பழங்களில் ஏற்கனவே இயற்கையான சர்க்கரை உள்ளதாலும், அதனுடன் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுவதால் அந்த பானத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கக்கூடும். இதனாலேயே நீரழிவு நோயாளிகள் பெரும்பாலும் எந்த பழச்சாறுகளையும் குடிக்க மாட்டார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஒரு பழச்சாறை அருந்தலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இனிப்பே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தியாகவே இருக்கும்.
ஒருவரின் உடலில் கணையம் இன்சுலின் உற்பத்தியை குறைக்கும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை சிறுநீர் வழியே வெளியேறாமல், ரத்தத்தில் சேர்வதையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்று அழைக்கின்றனர். இன்சுலின் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும்.
ஒரு குறிப்பிட்ட வயதில் கணையம் தனது செயல்பாட்டை குறைப்பதையே வகை 2 நீரிழிவு நோய் என்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவரின் உணவுப் பழக்கத்தின் மூலம் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின் படி மாதுளம் பழச்சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதை கண்டறிந்துள்ளனர்.
கரண்ட் டெவலப்மென்ட்ஸ் இன் நியூட்ரிஷன் என்கிற மருத்துவ இதழில் மாதுளம் பழச்சாறு பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் 21 சர்க்கரை நோய் உள்ள மனிதர்கள் பங்கேற்றனர், இவர்களை இரண்டு குழுக்களாக பிரித்தனர். அவர்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் சர்க்கரை சேர்க்காமல், தண்ணீர் கலந்த மாதுளை சாறு 236 மில்லி அளவில் குடுக்கப்பட்டது.
மற்றொரு குழுவிற்கு அதே அளவில் வெறும் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டது. இந்த சோதனை காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டது. வெறும் தண்ணீர் குடித்தவர்களின் இரத்த சர்க்கரை அளவில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால், மாதுளம் பழச்சாறு குடித்தவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததது. இவர்களுக்கு சரியாக 15 நிமிடங்களில் சர்க்கரை அளவு குறையத் தொடங்கியதை ஆய்வில் கண்டறிந்தனர்.
மாதுளம் பழச்சாற்றில் உள்ள பாலி பினால்கள் மற்றும் ஆக்சிஜினேற்றிகள் உணவு உண்ட பின்னர் சர்க்கரை அளவை குறைப்பதில் பங்கு வைக்கிறது.
மேலும் இதில் உள்ள புனிகலஜின் ஆல்பா அமைலேஸைத் தடுத்து சர்க்கரை ரத்தத்தில் சேருவதை படிப்படியாக அனுமதிக்கிறது. இதனால் ரத்தத்தில் வேகமாக சர்க்கரை சேர்வது குறைகிறது.
ஆரம்ப கால வகை 2 நீரழிவு நோயைக் கொண்டவர்கள் மாதுளம் பழச்சாறை எடுத்துக் கொள்ளுதல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ,மேலும் அவர்களின் அதிக இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மற்றொரு ஆய்வில், மாதுளை விதை எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் உண்ணா விரத இரத்த சர்க்கரை அளவைக் குறைத்துள்ளது. ஆயினும் அவர்களின் உடலில் இன்சுலின் சுரக்கும் அளவை மாற்றவில்லை.
நீண்ட நாளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளம் சாறு அருந்துவது ஒரு துணை மருத்துவ நடவடிக்கையாக இருக்கும். பல ஆய்வுகளில், மாதுளையை அடிக்கடி நுகர்வோரின் கிளைசெமிக் குறியீடுகள் சாதகமான அளவில் குறைந்துள்ளது. என்ன தான் மாதுளம் பழம் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் அதை ஆரோக்கியமான முறையில் அருந்தினால் தான் பலன் கிடைக்கும்.
வழக்கமாக ஜூஸ் கடை செய்முறை போல, மாதுளம் பழத்தில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து கரைத்து குடித்தால், அதனால் ஒரு நல்ல பலனும் கிடைக்காது. வெறும் மாதுளம் பழ முத்துகளுடன் குறைந்த அளவில் தண்ணீர் சேர்த்து, சாறாக்கி அருந்தினால் நீரழிவு நோயில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)