கொய்யா விதைகள்: உங்கள் ஆரோக்கியத்திற்கு நண்பனா? எதிரியா? அறிவியல் சொல்லும் உண்மை என்ன?

Guava seeds
Guava seeds Img credit: AI Image
Published on

கொய்யாப்பழம் சாப்பிட்டால் குடல்வால் அழற்சி வரும்; விதைகளை விழுங்கினால் செரிமானம் ஆகாது என பல எச்சரிக்கைகளை நாம் சிறுவயது முதல் கேட்டிருப்போம். ஆனால், இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? உங்கள் ஆரோக்கியத்திற்கு கொய்யா விதைகள் நண்பனா அல்லது எதிரியா? வாருங்கள் அறிந்துகொள்வோம்.

கொய்யா விதைகள் வயிற்று வலியை ஏற்படுத்துமா?

பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொய்யா விதைகள் எந்தவிதமான வயிற்று வலியையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, கொய்யா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை.

இருப்பினும், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக விதைகளைச் சாப்பிடும்போது, குடலில் அழுத்தம் ஏற்பட்டு லேசான பிடிப்பு உண்டாகலாம். மேலும், விதைகள் செரிக்க அதிக நீர் தேவைப்படும். போதிய நீர் குடிக்கவில்லை எனில் மலம் இறுகி வலி ஏற்படலாம். இந்த இரண்டு காரணங்களால் வேண்டுமானால் சிலருக்கு கொய்யா விதைகளை சாப்பிடும்போது அசௌகரியம் ஏற்படலாம்.

பலர் பயப்படுவது போல, கொய்யா விதைகள் குடல்வால் அழற்சிக்குக் காரணமாகின்றன என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மிக மிகக் குறைவு.

ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் ட்ராபிகல் பயோமெடிசின் (Asian Pacific Journal of Tropical Biomedicine) ஆய்வின்படி, செரிக்காத விதைகள் குடல்வாலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு 0.05% க்கும் குறைவு எனக் கண்டறியப்பட்டுள்ளது. விதைகள் குடல்வாலில் சிக்கிக் கொண்டு அழற்சி ஏற்படுத்தும் சம்பவங்கள் மிகவும் அரிதானவை எனக் குறிப்பிடப்படுகிறது. ஆகவே, ஆரோக்கியமான குடல் இயக்கம் உள்ளவர்கள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

கொய்யா விதைகளின் மறைந்திருக்கும் நன்மைகள்:

  • கொய்யா விதைகளைத் துப்பாமல் பழத்தோடு சேர்த்து உட்கொள்வது பல வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் மிக முக்கியமானது, விதைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து ஆகும்; இது குடல் இயக்கத்தைச் சீராக்கி, தீராத மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுநீரை அடக்கும் பழக்கம் இருப்பவரா? பல பிரச்னைகளுக்கு இதுவே காரணம்... உஷார்!
Guava seeds
  • மேலும், இந்த விதைகளில் செறிந்துள்ள பொட்டாசியம் சத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

  • உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இவை வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கச் செய்து, தேவையற்ற பசியைக் குறைக்கிறது.

  • இவை அனைத்திற்கும் மேலாக, இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுத்து, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உங்களை இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

அறிவியல் பூர்வமாக கொய்யா விதைகள் பாதுகாப்பானவை என்றாலும், கொய்யா விதைகளில் ஆக்ஸலேட்டுகள் சிறிய அளவில் உள்ளன. ஏற்கனவே சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. மேலும், குடல் புண் அல்லது தீவிரமான செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதைகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனே வயிறு உப்பசமா? இந்த 'மேஜிக் பூ' தேநீர் குடிங்க.. 5 நிமிஷத்துல ரிசல்ட்!
Guava seeds

விதைகளை நன்றாக கடித்துச் சாப்பிடுங்கள். விதைகளை விழுங்குவதில் தவறில்லை. அவற்றைத் துண்டாக்காமல் விழுங்கும்போது செரிமானம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். முக்கியமாக, கொய்யாப்பழம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

எனவே, உங்களுக்குத் தீவிரமான குடல் நோய்கள் இல்லாதவரை, விதைகளோடு கொய்யாப்பழத்தை ரசித்துச் சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் இல்லை.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com