

கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை தீர்மானிப்பதில் ஒரு தம்பதிக்கு குறிப்பாக பெண்ணுக்கு குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் குடல் மற்றும் கருப்பையின் செயல்பாடு ஒன்றோடு ஒன்று இணைந்தவை.
ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவசியம். அதேசமயம் அதிகப்படியாக ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் பைப்ராய்டுகள், பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான குடல் மட்டுமே ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியில் 70% எதிர்ப்பு சக்தியானது குடலில்தான் உள்ளது. ஆரோக்கியமான குடல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன் கருச்சிதைவுகளை தடுக்க உதவும். தரமான கரு முட்டைகள் விந்தணுக்களை உடல் உற்பத்தி செய்ய ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்ச வேண்டும். குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே நாம் உட்கொள்ளும் உணவு செரிமானமாகி ஊட்டச்சத்துக்களை (foods to improve fertility), குடல் உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற முடியும்.
ஆரோக்கியமான உடல் ஆனது செரோடோனின் (Serotonin) உற்பத்தியை மேம்படுத்துவதுடன் மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாள்பட்ட மன அழுத்தமும் கருவுறுதலுக்கு பெரிய தடையாக இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நவீன வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சரிவிகித உணவு முறையில் கவனம் செலுத்துவது கருவுறுதல் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும். நாம் சாப்பிடும் உணவுகள் கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தில் 90 நாட்கள் வரையில் தாக்கத்தை உண்டாக்கலாம்.
அன்றாட உணவில் கருமுட்டை விந்தணுக்களின் வளர்ச்சி உட்பட ஆரோக்கியமான செல் பிரிவுக்கு வைட்டமின் பி மிக முக்கியமானது. கீரை வகைகள், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் ஃபோலேட் சத்து அதிகம் உள்ளது.
துத்தநாகம் நிறைந்த உணவுகளான பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பீன்ஸ் ஆகியவை ஹார்மோன் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கருத்தரிக்க திட்டமிடும்போது ரத்த சோகையை தடுக்கும் இரும்பு சத்து உள்ள முருங்கைக்கீரை, கேழ்வரகு, கம்பு முதலானவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
இரும்புச்சத்து முழுமையாக உடலில் உறிஞ்ச வைட்டமின் சி அவசியம். அதனால் நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டும்.
இத்துடன் புரதம், ஒமேகா-3 என்று அன்றாட தேவைக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்ததாக உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்வது கரு உருவாக உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)