
தலைமுடி உதிர்தல் என்பது இளம் வயதுக்காரர்கள், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் என்று பரவலாக பலருக்கும் இருக்கும் பிரச்சனையாகும். தலைமுடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும் குடலின் ஆரோக்கியத்திற்கும் முடியின் ஆரோக்கியத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. குடலின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால் தலைமுடி உதிர்வது தொடரும். ஆனால் இது பலபேருக்குத் தெரியாது ... இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க...
குடல் ஆரோக்கியத்திற்கும் முடி உதிர்தலுக்குமான தொடர்பு:
ஊட்டச்சத்து உறிஞ்சப்படுதல்:
நமது உடலின் பிற பகுதிகளைப் போலவே தலைமுடி வலுவாக ஆரோக்கியமாக வளர குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவை. விட்டமின்கள் பி12, விட்டமின் சி, ஏ, டி, பயோட்டின் போன்றவையும் இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவையும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
குடல் ஆரோக்கியம் நம் முழுமையான உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் . குடல் பகுதி நாம் உண்ணும் உணவை ஜீரணித்து ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சும் ஒரு இடமாகும். இதுவே முடி வளர்ச்சிக்கு தேவையான வேலையையும் செய்கிறது. குடல் ஆரோக்கியமாக இல்லாத போது, குடல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஆரோக்கியமான உணவை உண்டாலும் கூட, முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் குடல் சிரமப்படும். தலைமுடியில் உள்ள மயிர்க்கால்கள் போதுமான அளவு சரியான ஊட்டச்சத்துக்களை பெறாத போது, பலவீனமாகி முடி மெலிந்து உடைந்து போகிறது. வலுவான செங்கல் அல்லது சிமெண்ட் இல்லாமல் ஒரு வீட்டைக் கட்டும் போது அது மிக விரைவில் இடிந்து விடும். அது போலத்தான் குடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போகும்போது அது முடி உதிர்வுக்கு வழி வகுக்கிறது.
ஜீரணம் பாதித்தல் / வீக்கம்:
குடலில் ஜீரணம் சரியாக செயல்படாத போது செரிக்கப்படாத உணவுத் துகள்கள் மற்றும் நச்சுகள் ரத்த ஓட்டத்தில் கசிவை ஏற்படுத்துகின்றன. சமநிலையற்ற குடல் நுண்ணுயிரி, உடல் முழுவதும் பரவலான வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நாள்பட்ட அழற்சி மயிர்க்கால்களை நேரடியாக பாதிக்கும். அவற்றை பலவீனப்படுத்தி முடி வளர்ச்சியை பாதிக்கும்.
நோய் எதிர்ப்பு அமைப்பை பாதித்தல்:
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதில் குடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும் போது அது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்கற்றதாக்குகிறது. இது மயிர்க்கால்களை நேரடியாக தாக்கி முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
சீரற்ற ஹார்மோன்கள்:
முடி வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரான் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள் தேவை. இந்த ஹார்மோன்களை குடலால் சரியாக ஒழுங்குபடுத்த முடியாமல் போகும். ஆரோக்கியமற்ற குடல், ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கிறது. இதனால் முடி மெலிந்து போவதற்கும் உதிர்வதற்கும் காரணமாகிறது.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி செரிமானத்தையும் ஊட்டச்சத்து உறிஞ்சதலையும் பாதித்து முடி உதிர்வதற்கும் காரணமாகிறது. மன அழுத்தமாக இருக்கும் நபர்களுக்கு குடல் ஆரோக்கியம் சீர் கெட்டுப் போகும். இது முடி வளர்ச்சியை பாதித்து முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். எனவே குடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது அவசியம். அதற்கு சமச்சீரான உணவு, நிறைய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ப்ரோபயாட்டிக்குகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
இவை தயிர் மற்றும் கெஃபீர் மற்றும் புளித்த உணவுகளிலும், பூண்டு, வெங்காயம் வாழைப்பழம் ஓட்ஸ் ஆகிவற்றிலும் காணப்படுகின்றன. போதுமான அளவு நீர் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். மன அழுத்தம் நீங்க, தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை குடல் நுண்ணுயிரியை எதிர்மறையாக பாதிக்கும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். குடல் ஆரோக்கியம் முடி வளர்ச்சியில் தெரியும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் அது தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சி முடி உதிர்வை கட்டுக்குள் வைத்திருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)