
தற்போது கோல்ட் காஃபியைப் போன்று ஐஸ் டீயும் பிரபலமாகி வருகிறது. இதை அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளும், பக்க விளைவுகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஐஸ் டீ அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:
நீரேற்றம்; வெப்பமான கால நிலையில் உடலுக்கு போதுமான அளவு நீர்ச் சத்து அவசியம். ஐஸ் டீ அருந்தும் போது அது உடலுக்கு தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது.
இதய ஆரோக்கியம்; சர்க்கரை சேர்க்காத ஐஸ் டீ யைத் தொடர்ந்து உட்கொண்டு வரும்போது அதை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேநீரில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கத்தை குறைத்து, கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.
எடை மேலாண்மை; ஐஸ் டீ யில் கலோரிகள் குறைவு. சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகளில் கலோரிகள் அதிகம். ஆனால் ஐஸ் டீயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல ஒரு பானம் ஆகும். எடையை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களுக்கும் ஐஸ் டீ உதவும்.
மேம்பட்ட மூளை செயல்பாடு; ஐஸ் டீயில் காஃபின் உள்ளது. மேலும் இதில் உள்ள அமினோ அமிலமும் சேரும் போது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் விழிப்புணர்வும் கிடைக்கிறது.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு; சர்க்கரை சேர்க்காத ஐஸ் டீ, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை வேகமாக கலக்காமல் மெதுவாக கலப்பதற்கு உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி; தேநீரில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன. இதனால் எளிதில் சளி பிடித்தல், காய்ச்சல், தொற்றுகள் மற்றும் வீக்கங்கள் போன்றவை ஏற்படுவது குறைகிறது.
பளபள சருமம்; ஐஸ் டீ யில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றப் பண்புகள் காரணமாக இது முகப்பருவை எதிர்த்து போராடுகிறது. புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தைக் காக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால், முகம் பளபளப்பாக மாறும்.
ஐஸ் டீ யின் பக்க விளைவுகள்:
ஐஸ் டீ யை அதிகமாக அருந்தும் போது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. மேலும் தூக்க முறைகளை சீர்குலைத்து விடுகிறது.
சிலருக்கு காஃபின் ஒத்துக் கொள்ளாது. காஃபின் சேர்ந்த பானங்களை அருந்தினால் அதிக உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். ஐஸ் டீயை அருந்தும் போது பதட்டம், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்றவற்றை உணர்வார்கள்.
சிலருக்கு தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவையும் ஏற்படலாம். சில நேரங்களில் வயிற்று வலி, குமட்டல் அல்லது உணவுக் குழாய் சுழற்சியை தளர்த்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் அதிகரிக்கலாம்.
உணவகங்களில் அல்லது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஐஸ் டீயை அருந்தும் போது அதில் உள்ள அதிக அளவு சர்க்கரையின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும். இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கலாம். ஐஸ் டீ யில் டானின்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை இரும்பு சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.
ஐஸ் டீ யை அருந்த விரும்புபவர்கள் வீட்டில் தயாரித்து அளவுடன் அருந்தலாம். கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் ஐஸ் டீ உடலுக்கு நல்லது அல்ல.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)