

நம் சருமத்தை சரியாக பராமரிப்பு செய்து வந்தாலும், முகத்தில் பருக்கள் தோன்றி கவலையடைய செய்கின்றன. பருக்களை நீக்க நாம் அதிக விலையுள்ள கிரீம்கள் மற்றும் சரும பரமரிப்பிற்கான சிறப்பு வகை சோப்புகளை பயன்படுத்த தொடங்குகிறோம். ஆனால், எப்போதும் பருக்கள் வரும் காரணத்தை நாம் யோசித்தது இல்லை. முதலில் அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் தான் அதற்கான நிரந்தர தீர்வை எட்ட முடியும்.
பருக்களுக்கு காரணம் உடலுக்கு வெளியே இல்லாமல், உள்ளேயும் இருக்கலாம். வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகத் தீர்வுகளை மட்டுமே அளிக்கும் நிலையில், சருமப் பிரச்னைகளின் நிரந்தரத் தீர்வு நமது உடலின் உள்ளே இருக்கலாம். அதாவது, வயிற்றுப் பிரச்னைகள் சருமத்தைப் அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வயிறு சரியாக பராமரிக்கப் படாவிட்டால், அதன் விளைவுகள் முகத்தில் தெரிய ஆரம்பிக்கும்.
வயிற்றுப் பிரச்னைகளின் அறிகுறிகள்:
வயிற்றில் பிரச்னை இருந்தால் அது முகம் மற்றும் தலையில் எச்சரிக்கை விடுத்து காட்டிக் கொடுத்து விடும். பல சருமப் பிரச்னைகள் வயிற்றுடன் அதிகம் தொடர்பு உள்ளவை. உங்கள் சரும நிறம் மாறினாலும், முகப்பரு, தடிப்பு, அரிப்பு போன்ற அறிகுறிகளை கண்டாலும் உடனடியாக வயிற்றின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இது போன்ற விஷயங்களுக்கு கிரீம் போன்ற வெளிப்புற சிகிச்சைகளை தொடங்கும் முன்னர், சருமப் பிரச்னைகளுக்கு உண்டாக்கும் காரணிகளை தேட வேண்டும். ஒருவேளை வயிற்றுப் பிரச்னை தான் இதற்கு காரணம் என்பதை அறிந்துக் கொண்டால், அதற்கான சிகிச்சைகளை தொடங்க வேண்டும்.
சருமத்திற்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு:
மனித உடலின் ஒவ்வொரு பகுதியும், மற்ற பகுதியுடன் தொடர்பில் உள்ளவை. வயிற்றுக்குள் செல்லும் உணவு தான், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்படக் காரணமாக உள்ளதை நாம் அறிவோம். ஒருவேளை உணவு சாப்பிடா விட்டால் கூட, அது குடலுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. அந்த நேரம் அதிக அமிலம் சுரந்து, இரைப்பை மற்றும் செரிமான மண்டலம் அனைத்தும் புண்ணாக்கப்படுகிறது. மேலும் வயிற்றில் உணவு இல்லா விட்டால், உடலில் உள்ள பல உறுப்புகளும் சக்தி கிடைக்காமல் சோர்வுற தொடங்குகிறது.
இதே போன்ற செயல்முறை தான் வயிற்றுப் பிரச்னைகளின் அறிகுறியை முகத்தில் காட்டுகின்றன. செரிமானமின்மை, அமிலத் தன்மை, வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் ஆகியவை தங்களது பாதிப்பை சருமத்தில் காட்டுகின்றன. மன அழுத்தம் குடலுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது. இது குடலின் இயல்பான செயல்பாட்டைக் குறைத்து, செரிமான வேகத்தை தாமதப்படுத்துகிறது. இதன் விளைவாக, குடலில் தீய பாக்டீரியாக்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. குடல் பாக்டீரியாக்கள் சமநிலையை பராமரிக்காமல் விட்டால், அது நேரடியாக நமது முகத்தைப் பாதிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து, முகத்தில் முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்பட வழிவகுக்கின்றன.
இதற்கான தீர்வுகள்:
வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை தேட, புரோபயாடிக் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். தயிர், மோர், வாழைப்பழம், மாதுளம் பழம், காய்கறிகள், வெள்ளரிக்காய் போன்ற நீர் நிறைந்த காய்களை தினசரி உணவில் சேர்க்க திட்டமிடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)