

எள் நம் தேக பலத்தைக் கூட்டும் ஒரு பொருள். எள்ளில் பல்வேறுபட்ட சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றை சாப்பிடுவதால் நாம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
சரகர் கூறுவது:
எள் வாயுவை அடக்குகிறது; ஆனாலும் கபத்தை அதிகரிப்பதில்லை. சக்தியை பெருக்குகிறது. உடல் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. உடலை சமன் நிலையில் வைக்கிறது. பருவ மாறுதல்களில் உடல்நிலை பாதகம் அடையாமல் ஸ்திர நிலையில் இருக்க உதவுகிறது. பெண்களுக்கு கர்ப்பப்பை நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக விளங்கும்படி செய்கிறது. வாத கபத்தில் ஜனிக்கும் வியாதிகளை அறவே நல்லெண்ணெய் நீக்குகிறது. வாத, கப வகை நோய்களையும் போக்குகிறது நல்லெண்ணெய் .
கறுப்பு நிற எள்ளை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு காலை வேளையில் நன்றாக கடித்து சாப்பிடுங்கள். அப்போதுதான் அதன் முழு பயனையும் பெறலாம். அதை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீர் குடியுங்கள். இந்த எள்ளை அப்படி சாப்பிட்ட 3 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. விடியற்காலையில் இந்த பிரயோகத்தை கடைபிடித்தால் மிகவும் நன்று என்று கூறியுள்ளார்.
கூடவே உடம்பிலும் நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டால் ஒல்லியான மனிதர்களுக்கு எடை கூடும். தடித்தவர்களுக்கு சற்று உடல் மெலிந்தும் சமநிலை அடையும் என்கிறார். வாயுவோ கபமோ பிடித்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெற்று உடல் வளம் பெறலாம். பற்கள் வலிமை பெறும். அகாலத்தில் தலைமுடி நரைத்தவர்களுக்கு இது பயன் தருகிறது. சரீரம் பளபளப்புடன் விளங்கும். இந்த பிரயோகம் ஒரு வருஷ காலம் விடாது செய்து வந்தால் நல்ல பலனை அனுபவிக்கலாம்.
இப்படி செய்யும்பொழுது இளமையுடன் விளங்க முடியும். வாழும் காலம் வரையிலும் பலத்துடனும் அழகுடனும் இருப்பார்கள்.
புதிய வெல்லம் சேர்த்து செய்யும் எள் தின்பண்டங்கள் தீமையை விளைவிக்கும். ஆதலால் பழைய வெல்லம் சேர்த்து எள்ளுடன் கலந்து அதோடு சிறிது கோதுமை மாவையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம் என்று கூறுகிறார்.
எள் வகைகள்:
ஆயுர்வேதத்தில் ருதுக்களையும் ருதுக்களுக்கு ஏற்ற விதமாக உட்கொள்ள வேண்டிய ஆகார விதத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. மகர சங்கராந்தி உத்தராயன பருவத்தின் போது உட்கொள்ள வேண்டிய பொருட்களில் எள்களுக்கு முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பருவத்தில் ஏற்படுகிற வியாதி உபாதைகளின் காரணங்களை எள் நீக்கி விடுகிறது என்பது உண்மை .குளிர் காற்றால் ஏற்படும் சக்தி இழப்பு, பசியின்மை, இருமல், வாயுபாதைகள் இவற்றை எள் தடுக்கிறது. உடலுக்கு வேண்டிய உஷ்ணம், நீரின் பெருக்கம் சக்தி பெருக்கம் இவற்றை எள் தருகிறது.
எள்ளில் கறுப்பு எள்ளே சிறந்தது. அதனால் தான் இன்றும் சாப்பிடுவதற்கும், தானம் செய்யும் போதும், பிரசாதத்திலும், மருந்து வகைகளிலும், ஹோம பூஜையின் போதும் கறுப்பு நிற எள்ளையே பயன்படுத்துகிறோம். வெள்ளை எள் இரண்டாம் பட்சமாகவும், சிவப்பு எள் கடைசி பட்சமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
எள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
எள்ளை சாப்பிட்டு குளிர்ந்த நீரை குடிப்பதால் பல் ஆரோக்கியம் மேம்படும். மூல நோயும் அடங்கும். தாய்ப்பாலுக்கு அதிகமாக சுரக்கும் மலச்சிக்கல் நிவர்த்தியாகும். வாயு உபாதை நீங்கும்.
ஆட்டுப்பாலில், கறுப்பு எள்ளை அரைத்து அந்த விழுதை கலந்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து காலை வேளையில் குடிப்பதால் மூலநோய் அடங்குகிறது என்று சிவபெருமானே ஒரு ஸ்லோகத்தில் கூறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில நேரங்களில் அடிப்பட்டு இரத்தம் வழிந்து சதை பெயர்ந்து இருந்தால் அந்த இடத்தில் எள்ளை விழுதாக அரைத்து அதனுடன் நெய்யையும், தேனையும் கலந்து உடனே தடவினால் பயன்பெறலாம்.
எள் விழுதோடு உருகாத நெய் விழுதையும் நீரில் கழுவி கலந்து கற்பூரத்தை சேர்த்து கட்டினால் நெருப்பு காயங்கள் ஆற ஆரம்பிக்கும்.
எண்ணெயில் உள்ளிப் பூண்டை போட்டு சுட வைத்து காதில் ஊற்றுவதால் காது வலி குணம்பெறும்.
முதுகில் வலி ஏற்பட்டால் சுக்கு பெருங்காயத்துடன் சூடாக்கி அந்த நல்ல எண்ணையை தேய்த்தால் போதும்.
குளிர் நாட்களில் சருமம் உரிந்து எரியும் உடல் ரணங்களில், உதடு, கண்ணம் ஆகியவற்றில் நல்லெண்ணெய் தேய்ப்பது நல்லது.
முழங்கால் மூட்டுகளில் வலி இருக்கும் பொழுது நல்லெண்ணெய்யை நன்றாக முழங்காலில் இருந்து கணுக்கால் அதன் மேற்புறம் வரை அதாவது பாதத்தின் மேற்புறம் வரை நன்றாக தேய்த்து உருவி விட வேண்டும். அப்படி தேய்த்தால் காலையில் வலி எதுவும் இன்றி இயல்பாக நடக்க முடியும். நடக்கும் பாதத்தில் மட்டும் தேய்க்கக்கூடாது.
இதுபோல் உடலுக்கு நன்மை தரும் எள் மற்றும் எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போமாக!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)