

பெண்களை பார்த்தாலோ, அவர்களைப் பற்றி யோசித்தாலோ பயம் வருகிறதா? அப்படியென்றால் 'கைனோஃபோபியா'வாக (Gynophobia) இருக்கலாம்.
சிலர் பெண்களை பொது இடத்தில் பார்த்தாலே பதற்றம் அடைந்து தள்ளி நிற்பார்கள். இது ஒரு மனரீதியான பாதிப்பு என்று மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இது கைனோஃபோபியா அல்லது ஃபெமினோஃபோபியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை சமூக மானோவியல் கோளாறாகும். இது பெண்களையும் பாதிக்கும் என்றாலும் அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்கள்தான். இது மிசோஜினி (Misogyny) எனப்படும் பெண்களை வெறுப்பது என்பதிலிருந்து மாறுபட்டது. இது வெறுப்பு அல்ல, ஒரு வகையான மன ரீதியான பயம் மட்டுமே.
அறிகுறிகள்:
கைனோஃபோபியா என்பது பெண்களைப் பற்றிய தீவிரமான, பகுத்தறிவற்ற பயமாகும். இதில் பெண்கள் இருக்கும் சூழ்நிலைகளை தவிர்ப்பது.பெண்களைச் சுற்றியுள்ள பொழுது கடுமையான பயம் அல்லது பதற்றம். பெண்களுடனான தொடர்புகளை தவிர்க்கும் மனநிலை. பதட்டத் தாக்குதல்கள்(panic attacks) கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வு.
காரணங்கள்:
கடந்த கால அதிர்ச்சிகரமான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். பெண்களால் அவமதிக்கப்பட்ட, கேலி, கிண்டல்கள் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஆண்களே பெரும்பாலும் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
பெண்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள். எதிர்மறையான பெண் கதாபாத்திரங்களின் கதைகளைச் சின்ன வயதில் கேட்பதும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாகலாம்.
உளவியல் பிரச்னைகளான மனச்சோர்வு, மனச்சிதைவு பிரச்னைகளைத் தொடர்ந்தும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
சிறுவயதில் ஏற்பட்ட புறக்கணிப்பு, மனம், உடல் ரீதியான தாக்குதல் போன்ற மோசமான அனுபவங்கள் மூளையில் பதிந்து விட்டால், பெண்களைப் பார்க்கும் பொழுது அந்த நினைவுகளுடன் தொடர்புபடுத்தி பயம் ஏற்படும். இந்த பாதிப்பு இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பிறரிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
சிகிச்சை முறைகள்:
கைனோஃபோபியாவை எதிர்கொள்வதற்கு உளவியல் சிகிச்சையே சிறந்தது. பயத்தை போக்குதல், நடத்தை சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பேச்சு சிகிச்சை (Talk Therapy):
அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) போன்ற முறைகள் பயத்தை குறைக்க உதவும்.
வெளிப்பாடு சிகிச்சை (Exposure Therapy):
படிப்படியாக பெண்களுடன் தொடர்பு கொண்டு பயத்தை போக்க உதவும். இந்த சிகிச்சையில் பெண்களின் வீடியோக்களை பார்ப்பது, பெண்கள் பேசும் ஆடியோவை கேட்பது, பெண்கள் இருக்கும் இடங்களுக்கு செல்வது போன்ற பதட்டத்தில் உருவாக்கும் செயல்களை படிப்படியாக தொடர்வது. இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரின் உதவியை நாடுவது அதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இந்த சிகிச்சைகளால் ஓரளவு குணமடைந்த பின் பயத்தின் உண்மையான நிலையைக் கண்டறிந்து, சரியான உளவியல் சிகிச்சைக்கு தயார் செய்வார்கள். படிப்படியான சிகிச்சைகளின் மூலம் மருத்துவர்களால் இந்த கைனோஃபோபியா என்ற நிலை சரி செய்யப்படும்.
மருந்துகள்:
இது தனிநபரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கக்கூடும் என்பதால் தீவிர பதட்டத்தைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். பொதுவாக கைனோஃபோபியா சிகிச்சைக்கு வெளிப்பாடு சிகிச்சை மற்றும் CBT போன்ற சிகிச்சை அணுகுமுறைகள் பரிந்துரைக்கப்படும். இருப்பினும் பயம் குறிப்பிடத்தக்க பதட்டத்தை ஏற்படுத்தினால், மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கலாம்.