
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி' என்று சொல்வார்கள். அதைப்போல தான் நம் வாழ்க்கையில் சில நல்ல பழக்க வழக்கங்கள் என்று நாம் தொடர்ந்து தீவிரமாக கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நம் ஆயுளைக் கூட குறைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அந்த பழக்க வழக்கங்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. அதிக உடற்பயிற்சி
நம் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் ஒர்க் அவுட் தேவையென்றாலும் அளவுக்கு மீறி அதில் ஈடுபட்டால் இதயத்தை பாதிக்கும், நோயெதிர்ப்பை பலவீனப்படுத்தும் மற்றும் மூட்டுக்கள் பாதிப்படையும். மனநலம் பாதிக்கப்படுவதோடு ஹார்மோன்களின் சமச்சீரின்மை ஏற்படும். மிதமாகவே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2. அதிக அளவு தூக்கம்
அளவுக்கு அதிகமாக தூங்குவதால் மனச்சோர்வு மற்றும் Sleep Apnea பிரச்னை ஏற்படலாம். இதயநோய் மற்றும் நீரிழிவும் ஏற்படலாம். இது உங்களை சோம்பேறியாக்கிவிடும். காலையில் எழுவதை ஒரே நேராகக் கொள்ள வேண்டும்.
3. ஆரோக்கியம் குறித்து கவலை
சிலர் தங்கள் உடல் நலம் பற்றி அதிக அளவு கவலைப் படுவார்கள். அடிக்கடி உடலை பரிசோதிப்பது மன அழுத்தத்தில் கொண்டு விடும். இவர்கள் எப்போதும் பய உணர்வோடும் தங்களுக்கு ஏதோ பெரிய பாதிப்பு என்றே நினைப்பார்கள். அடிக்கடி செக் அப் செய்வதை விடுத்து பொழுது போக்கு மற்றும் எல்லோருடனும் பழகுவதில் கவனம் செலுத்தலாம்.
4. வேலையில் மட்டுமே மூழ்கி இருத்தல்
சிலர் முழு மூச்சாக சாதிக்க நினைத்து வேலையிலேயே மூழ்கி, நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடம் இருந்தும் விலகியே இருப்பார்கள். உணர்வு பூர்ணமான பக்கபலம் இல்லாமல் உடலும், மனமும் இதனால் சோர்ந்து விடும். வேலைக்கென்றும், உங்களுக்கென்றும் நேரம் ஒதுக்கினால் மட்டுமே நன்கு வாழ முடியும்.
உணர்வுகளை அடைத்து வைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாவதும், நல்ல நிலையில் இல்லையென்றாலும் அப்படி இருப்பது போன்ற போலியான தோற்றத்தை தருவதும் ஆரோக்கியமல்ல. இதனால் நீங்கள் எல்லோரிடமிருந்து விலகியே நிற்பீர்கள். அதைத் தவிர்த்து வெளிப்படையாக உங்கள் பிரச்னைகள் குறித்து பேசுங்கள்.
எல்லாவற்றையும் நீங்களே கையாளுவது உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும் டிஜிட்டல் உலகத்தையே நம்பியிராமல் நீங்கள் நிம்மதியாக மூச்சு விடும் அளவிற்கு அதில் ஈடுபடுங்கள். எப்போதும் வேலைதான் முன்னேற்றம் தரும் என்ற எண்ணம் உங்கள் ஹார்மோன்களை பாதித்து உடல் மற்றும் மனம் அளவில் பாதிப்பு ஏற்படுத்தும். ஆரோக்கியமான பழக்கங்கள் மட்டுமே உங்களை நல்ல நிலையில் வைக்கும்.
5. உணவில் அதீத கட்டுப்பாடு
நீங்கள் மிக குறைவாக சாப்பிடுவது நல்லது என்ற நினைத்து உணவைத் தவிர்த்தால், ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் உடல் நன்கு இயங்க நல்ல சமச்சீரான உணவை உட்கொள்ளவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)