கொத்துக் கொத்தாக முடி கொட்டுகிறதா? காரணங்களும் இயற்கை தீர்வுகளும்!

ஹார்மோன் மாற்றம், இரும்புச்சத்து குறைபாடு முதல் சின்ன வெங்காயச் சாறு வரை - முழு கூந்தல் வழிகாட்டி!
Hair loss - முடி உதிர்வு
Hair loss - முடி உதிர்வு
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணமானது. ஆனால் அதற்கு மேல் அதிகப்படியாக முடி கொட்டுவதற்குப் பல உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த காரணங்கள் உள்ளன. முடி உதிர்வுக்கு மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற பல முக்கிய காரணங்கள் உள்ளன.

மரபியல் (Genetics):

உலக அளவில் முடி உதிர்வுக்கு மிக முக்கிய காரணம் ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா (Androgenetics Alopecia) எனப்படும் பரம்பரை வழுக்கையாகும். குடும்பத்தில் யாருக்காவது இந்த பாதிப்பு இருந்தால், வயது மூப்பிற்கு ஏற்ப ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி மெலிந்து கொட்டத் தொடங்கும். இந்த பரம்பரை மரபு வழியால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழுக்கை அல்லது முடி மெலிதல் ஏற்படுகிறது.

ஹார்மோன் மாற்றங்கள்:

உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடி உதிர்வை ஏற்படுத்தும். கர்ப்பம், பிரசவ காலம் மற்றும் அதற்குப் பிந்தைய நிலை, மாதவிடாய் நிறுத்தம் (Menopause), தைராய்டு கோளாறுகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டி (PCOS) ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி முடி கொட்டுதலைத் தூண்டுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு:

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மை நேரடியாக முடியின் வேர்க்கால்களை பாதிக்கும். உணவில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய வைட்டமின்கள் குறையும் போது முடி பலவீனம் அடைகிறது. மிக விரைவாக உடல் எடையைக் குறைப்பதும் முடி உதிர்வை ஊக்குவிக்கும்.

மன அழுத்தம்:

கடுமையான உடல் அல்லது மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium) என்ற நிலையை ஏற்படுத்தி அதிகப்படியான முடியை உதிரச் செய்கிறது. ஏதேனும் ஒரு பெரிய அதிர்ச்சி, அறுவை சிகிச்சை அல்லது கடுமையான நோய்த்தொற்றுக்குப் பிறகு இது பொதுவாக காணப்படும்.

தவறான கூந்தல் பராமரிப்பு முறைகள்:

தலைமுடியை மிகவும் இறுக்கமாகப் பின்னுவது, மற்றும் ஈர முடியை முரட்டுத்தனமாகத் துடைப்பது போன்றவைகளால் முடி உடைகிறது. அத்துடன் அதிகப்படியான கெமிக்கல் கலந்த ஷாம்பூக்கள், ஹேர் டை மற்றும் வெப்பமூட்டும் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவது போன்றவற்றாலும் முடி உதிர்வு ஏற்படும்.

மருந்துகள் மற்றும் நோய்கள்:

புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைகள், உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மூட்டு வலி போன்ற நோய்களுக்கு உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்கவிளைவின் காரணமாகவும், சில நாள்பட்ட மருத்துவப் பிரச்சினைகளாலும் முடிகள் அதிக அளவில் கொட்டும்.

Hair loss - முடி உதிர்வு
Hair loss - முடி உதிர்வுImage Credit: Gemini

தீவுகள் மற்றும் பராமரிப்பு:

  • புரதச்சத்துக்கள் நிறைந்த பால் பொருட்கள், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரதச்சத்து மற்றும் விட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

  • இரும்புச்சத்து மிக்க கீரைகள், பேரிச்சம்பழம், கேரட் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது முடியின் வேர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை சீராகக் கொண்டு சேர்க்கும்.

இதையும் படியுங்கள்:
பிரசவத்திற்குப் பின் பெண்களின் மூளையில் நடக்கும் மேட்ரெசென்ஸ் மாற்றம்!
Hair loss - முடி உதிர்வு
  • வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

  • கெமிக்கல் ஷாம்புகளுக்கு பதிலாக சீயக்காய் அல்லது அரப்பு போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.

  • சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு அலசி விட, அதில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும்.

  • வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மன அமைதியைப் பெறலாம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமும் அவசியம்.

  • முடி ஈரமாக இருக்கும்போது சீவாமல் இருப்பது நல்லது. காரணம் அந்த நேரத்தில் முடியின் வேர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும். நன்கு உலர்ந்ததும் அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி தலையை சீவலாம்.

இதையும் படியுங்கள்:
உயிரியல் உலகை அதிரவைத்த AI: DNA-வில் ஒளிந்திருந்த புதிய ரகசியம்!
Hair loss - முடி உதிர்வு

கடுமையான முடி உதிர்வு இருந்தாலோ, திடீரென கொத்துக் கொத்தாக முடி கொட்டினாலோ அல்லது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் வழுக்கை திட்டுகள் தென்பட்டாலோ உடனடியாக ஒரு சரும மற்றும் கூந்தல் நிபுணரை சந்தித்து தகுந்த சிகிச்சையைப் பெறவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com