

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது பல நாடுகளை பயமுறுத்தி வருகிறது ‘ஹண்டா வைரஸ்’ (Hantavirus). இந்த வைரஸ் பெரும்பாலும் எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு தீவிரமான வைரஸ் தொற்று ஆகும். ஆனால் இந்த ஹண்டா வைரஸானது மனிதர்களிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவுவது மிகவும் அரிது. கோவிட்-19ஐ விட இது வேறுபட்டது மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் பரவும் வேகம் குறைவாகவே கருதப்படுகிறது.
ஹன்டாவைரஸ் (Hantavirus) என்பது ஒன்றல்ல, குழுவாக உள்ள வைரஸ் தொகுப்பு. இவை ரோடன்ட்ஸ் (Rodents) எனப்படும் எலி, பெருச்சாளி இனங்களில் இருக்கக்கூடியவை.
பொதுவாக ஹண்டா வைரஸ் நேரடியாக மனிதர்களிடையே பரவாது. எலியின் சிறுநீர், கழிவுகள், உமிழ்நீர் உலர்ந்து காற்றில் கலந்து அந்த தூசியை சுவாசிப்பது, எலி கடித்தல், மாசுபட்ட உணவு ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படலாம்.
எலிகள் அதிகமாக புழங்கும் குடோன்கள், பழைய வீடுகள், தானிய சேமிப்பு கூடங்கள், பண்ணைகள் போன்ற இடங்களில் இருந்தும் இந்த வைரஸ் பரவலாம்.
இந்த வைரஸ் மனிதர்களின் நுரையீரலை தாக்கும் போது திடீர் காய்ச்சல், தசை வலி, கடும் சோர்வு, தலைவலி, வாந்தி காணப்படும். இது தீவிரமாக மாறும்போது மூச்சுத்திணறல் (HPS - Hantavirus Pulmonary Syndrome), நுரையீரலில் திரவம் சேர்தல் போன்ற ஆபத்தான நிலை உருவாகும். இப்படி சுவாசம் தொடர்பான பிரச்னை வந்தால், அதன் விளைவாக இறப்பு ஏற்பட 30 முதல் 50 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படும் ஹண்டா வைரஸ் தொற்றில் அதிக காய்ச்சல், கண் சிவப்பு, வயிற்று வலி, ரத்தக்கசிவு, சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் குறைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பொதுவாக தொற்று ஏற்பட்ட 18 வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் தொடங்கலாம். ரத்தப்பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை மற்றும் சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனை மூலம் தொற்றை கண்டறிவார்கள்.
இந்த வைரசை தடுக்க வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எலிகளை கட்டுப்படுத்துவது மட்டுமே தீர்வு என்கின்றனர். எலிகள் இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்யும்போது, உலர்ந்த நிலையில் பெருக்கக் கூடாது. முதலில் கிருமிநாசினி தெளித்து, நனைத்த பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட எலிகளின் கழிவுகள் உள்ள இடங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். சுத்தம் செய்யும்போது முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவும்.
எலிகள் புழங்கும் இடங்களை கண்டறிந்து மூடி விடுதல், உலர்ந்த எலி கழிவுகளை கிருமிநாசினி தெளித்து அப்புறப்படுத்துதல், எலிகளை ஒழிக்க உதவும் அனைத்து வழிகளையும் கடைபிடித்து வாழும் இடங்களில் எலிகள் இல்லாத சூழலை உருவாக்குவதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியும் என்று மருத்துவ துறையினர் கூறுகினறனர்.
ஹண்டா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைகளோ, தடுப்பூசியோ கிடையாது. சப்போர்ட்டிவ் சிகிச்சைகள் மட்டும்தான் பலனளிக்கும். உடனடியாக கவனிக்காத பட்சத்தில் மரணம்தான் முடிவாகும். ஹண்டா வைரஸ் தொற்றானது கோவிட் தொற்று போன்றதல்ல, அதையும்விட தீவிரமானது.
அது அர்ஜென்டினா நாட்டில் மிகவும் பரவலாகக் காணப்படுவது. பிரான்சில் 11 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உலக நாடுகளில் இது பரவி வேகமாக வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியாவுக்கு வந்த கோவிட் தொற்று மாதிரி, இந்த வைரஸும் இடம் பெயர்தல் மூலம் பரவலாம்.
நம்மூரில் பரவலாகக் காணப்படும் எலிக்காய்ச்சலும், ஹண்டா வைரஸ் தொற்றும் ஒன்றல்ல. ஹண்டா வைரஸ் தொற்று இந்தியாவிற்கு வந்தால் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம், இந்தியாவில் எலிகள் மிக அதிகம். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)