மக்கள் அனைவரும் டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எல்லா நேரங்களிலும் நம்மோடு பயணிப்பது, இந்த டிஜிட்டல் சாதனங்களே! அந்த வகையில், ப்ளூ டூத் ஹெட்ஃபோன் போன்றவை காதுகளை விட்டு பிரியா ஒன்றாக மாறிவிட்டன.
காலையில் எழுந்து கழிப்பறைக்கு செல்லும்போது கூட சிலர் கைபேசி, ப்ளூ டூத் / ஹெட்ஃபோனுடன் தான் செல்வர். அதன்பின் காலை உணவு உண்ணும்போது, பணியிடத்தில், பயணத்தின்போது, இரவில் வெகுநேரம் என பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சிலர் இரவில் தூங்கும்போது கூட அதை பயன்படுத்திக்கொண்டே தான் தூங்குகின்றனர்.
சமீபத்தில், இந்த இயர்போனால் நடந்த ஒரு சம்பவம் மனதை பதற வைத்தது. ஆம்! கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில், தனது தொலைந்த இயர்போனை தண்டவாளத்தில் தேடியபோது ரயில் வருவதை கவனிக்காமல் இரயிலில் அடிப்பட்டு இறந்த சம்பவம் மனதிற்கு வேதனையளித்தது.
அந்த அளவிற்கு இயர்போனை முக்கியமாக நினைக்கிறார்கள் இந்த காலத்து இளைய தலைமுறையினர். உண்மையில் அதிக நேரம் இயர்போன் உபயோகிப்பது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியுமா?
ஹெட்ஃபோன் மூலம் எழும் ஒலி அலைகள் தொடர்ந்து நமது செவி பறையைத் தாக்குவதால் எதிர்காலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.
கேட்கும் திறன்
அதிக ஒலியில், ஹெட்ஃபோன் மூலம் எழும் ஒலி அலைகள் தொடர்ந்து நமது செவி பறையைத் தாக்கினால் விரைவில் கேட்கும் திறன் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதய பாதிப்பு
ப்ளூ டூத் / ஹெட்ஃபோன் காதுகளை மட்டும் தாக்குவதில்லை; அதன் அதீத ஒலியால் சிலருக்கு இதயம் வேகமாக துடிக்கும். இதனால் நாளடைவில் இதயம் தொடர்பான பிரச்னை வர அதிக வாய்ப்புள்ளது.
தலைவலி
ஹெட்ஃபோன் மூலம் எழும் ஒலி அலைகள் மூளையை பாதிக்கும் என்பதால், தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி போன்றவை ஏற்படும்.
மனஅழுத்தம்
பல பேர் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், தங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வதற்கும்தான் ப்ளூ டூத், ஹெட்ஃபோன் போன்றவற்றை பயன்படுத்தி பாடல் கேட்கின்றனர். ஆனால் அவ்வாறு அதிக ஒலியில் பாடல் கேட்டால், அதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதற்கு நாம் தான் பிரச்னையை தேடி செல்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே முடிந்தளவு மிக குறைவான ஒலியில் ப்ளூ டூத், ஹெட்ஃபோன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். அதைபோல் அவற்றை நீண்ட நேரம் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.