அன்றாட வாழ்க்கையில் மக்கள் வேலை, படிப்பு, குடும்பம் என பிஸியாக இருக்கின்றனர். தினசரி சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு செல்வது என ஒரே மாதிரியான வழக்கத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால் பல நேரங்களில் இதிலிருந்து ஒரு பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். அப்போதெல்லாம் அவர்கள் பயணத்தை தேர்ந்தெடுப்பது நல்ல தேர்வாக அமையும். ஏனெனில் பயணம்தான் மனதிற்கு மகிழ்ச்சி அளித்து அமைதியை கொடுக்கும் விஷயமாகும்.
தனிமையில் இருந்தால் அல்லது மனஅழுத்ததில் இருந்தால் கூட பயணம் மேற்கொள்வது நல்ல தீர்வாக அமையும். பயணம் செய்வது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். எனவே மன அழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை பெறவும் நம் வாழ்வில், பயணம் மிக அவசியமாகிறது. பயணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பயணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
மன அழுத்தம் குறையும்
அவ்வப்போது பயணம் மேற்கொள்வது உங்கள் உடலில் கார்டிசோலின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் வேலையில் நீங்கள் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். எனவே அவ்வப்போது பயணம் மேற்கொள்வது அவசியம்தான்.
மன அமைதி
பொதுவாகவே மலை, நதிக்கரை என எங்காவது பசுமை சூழ்ந்த இடத்தில் அமர்ந்து சுத்தமான காற்றை சுவாசித்தாலே மனதிற்கு அமைதி கிடைக்கும். பலபேர் மனஅமைதிக்காக இரவு நேரங்களில் நடைபயணம் மேற்கொள்வது, பைக் ரைடு செல்வது என தேர்ந்தெடுத்து தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்வர். இது மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்க உதவியாக இருக்கும்.
நேர்மறையான சிந்தனைகள்
நீங்கள் அதிக மனஅழுத்தத்தில் இருந்தால் உங்களை அறியாமலே எதிர்மறையான சிந்தனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் மனம் புத்துணர்ச்சியாக மாறுவதால் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க முடியும்.
படைப்பாற்றல் அதிகரிக்கும்
பயணத்தின் போது புதிய கலாச்சாரம், மொழி, உணவு, மக்கள், இசை போன்றவற்றை கற்க முடியும். புதிய அனுபவத்தை நீங்கள் பெறுவதாலும் மனதை நேர்மறையாக வைப்பதாலும் உங்களுக்குள் படைப்பாற்றல் அதிகரிக்கும்.
புதியபுதிய அனுபவங்களை கற்கும்போதுதான் நமக்குள் புத்துணர்ச்சி கிடைப்பதோடு, நல்ல மாற்றங்களை உணர முடியும். மேலும் ஒரே மாதிரியான வழக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிந்த அளவு உங்கள் வாழ்க்கையில் பயணத்தை அவசியமாக்கி கொள்ளுங்கள்.