
‘வயிற்றைக் கேட்டுக் கொண்டுதான் வாய் சாப்பிட வேண்டும்,‘ என்று ஜப்பானிய பழமொழி ஒன்று உண்டு.
அதில் அர்த்தம் இருக்கிறது. உடற்கூறு பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே போதிக்கப்படுகிறது.
ஆமாம். உடலுக்குள்ளே உள்ள உறுப்புகளின் இயக்க ரகசியத்தை யாராலுமே அறிய முடியவில்லை. ஒவ்வொன்றும் அதனதன் வேலையை செவ்வனே செய்து வருகிறது. அதனால் உடல் நலம் சிறப்படைகிறது. அந்த உறுப்புகளில் மிகவும் பிரதானமானது – வயிறு, இரைப்பை. ருசிக்கு அடிமையாகி நாக்கு ஏற்கும் எல்லா உணவுப் பொருட்களும், பற்களால் அரைக்கப்பட்டு உள்ளே போய் இரைப்பையில் விழுகின்றன. அதேபோல பானங்களும் விழுங்கப்படுகின்றன.
சரி, இவ்வாறு உள்ளே வந்து விழும் பொருட்களின் தன்மையை ஆராய்ந்து, அவற்றுடன் இணைந்து வரும் சத்துகளைப் பிரித்து ரத்தத்தில் சேர்க்கவும், உடலுக்கு வேண்டாத சக்கையைப் பிரித்தெடுக்கவும், இந்த இரைப்பைதான் வயிற்றுப் பகுதியின் தலைமைச் செயலகமாகச் செயல்படுகிறது. இரைப்பை சோதித்து அனுப்பும் உணவுப் பகுதிகளை கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்றவை, அதே இரைப்பையின் ஆணைப்படி தமது அதிகாரத்துக்குட்பட்டு சத்தாகவும், கழிவாகவும் பிரித்துக் கொள்கின்றன. இதனால் ரத்தம் உடலெங்கும் பரவி, இதயத்தினுள் சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல ரத்தமாக வெளிவந்து உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வாய் மட்டுமல்லாமல், நாசி உள்ளே அனுப்பும் காற்றை நுரையீரல் கிரகித்துக் கொண்டது போக, இரைப்பைக்குள்ளும் போகுமானால், அதையும் பெரும்பாலும் ஏப்பமாகவோ, அபானவாயுவாகவோ இரைப்பை வெளியே தள்ளி விடுகிறது.
இந்த அதிசயம் யார் சொல்லிக் கொடுத்து நிகழ்கிறது? கருவிலேயே இந்த இயக்கம் இயற்கையாகவே அமைந்து விடுகிறதே, அது எப்படி?
இதேபோல கை, கால் மூட்டுகள் இயங்குகின்றன. இந்த இணைப்புகளுக்குள், உராய்வு இன்றி, மடங்கியும், நீண்டும் செயலாற்ற யார் எண்ணெய் விடுகிறார்கள்? மூட்டுகளில் உள்ள மஜ்ஜை (lubrication) எப்படி தானாக உருவாகி எந்த உராய்வும் நிகழா வண்ணம் தடுக்கிறது? சாதாரண நடை மட்டுமா, ஓட்டம், பாய்ச்சல், பந்தய வேகம் என்று எல்லா துரித இயக்கங்களுக்கும் ஈடு கொடுக்கிறதே, இதை யார் தயாரித்து அளித்திருப்பார்கள்?
மூளைக்குள் அவரவர் திறமைக்கேற்ப கம்ப்யூட்டரைப் பொருத்தியது யார்?
யாரைக் கேட்டுக் கொண்டு இதயம் துடிக்கிறது? கடிகாரத்துக்காவது குறிப்பிட்ட இடைவெளியில் பேட்டரி மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு அவசியமே இல்லாதபடி இதயம் லப், டப் என்று ஓயாமல், இருபத்து நான்கு மணிநேரமும் இசைக்கிறதே எப்படி?
இவ்வளவு ஏன், நாம் விழுங்கும் எந்தவகை மருந்தும், மாத்திரையும் இரைப்பைக்குதான் போய்ச் சேருகிறது. இன்ன மருந்து அல்லது மாத்திரை இன்ன உபாதைக்கானது; அவ்வாறு உபாதை கொண்டிருக்கும் எந்த உறுப்புக்குப் போய்ச் சேரவேண்டுமோ அதை எந்தக் கணக்கு அடிப்படையில் இரைப்பை கொண்டு சேர்க்க உதவுகிறது?
இதெல்லாம் சராசரியான ஆரோக்கியமான உடலுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் இயக்கங்கள்தான். அதேசமயம் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளைப் பொறுத்துதான் இரைப்பையும் தன் கடமையைச் செய்யும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக கண்டதையும் போட்டு, அதற்குள் திணித்தால், ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் அது ஒத்துழையாமை இயக்கமும் நடத்தும்; அதுவே பலவகைப் பிணிகளுக்கும் வழிவகுக்கும்.
ஆகவே நாக்குச் சபலத்துக்கு மனதை அடிமையாக்காமல், ஜப்பானிய பழமொழியை நினைவில் கொண்டு ருசிக்காக அல்லாமல் பசிக்கு மட்டும் சாப்பிட்டு உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?‘ என்ற யோசனை வரும்போதே நிறுத்திவிடுவது உத்தமம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அசைவ உணவு உண்பவர்களைப் பார்த்து சுவாமி சின்மயானந்தா, ‘உங்கள் இரைப்பையை ஏன் சவக்குழியாக்கிக் கொள்கிறீர்கள்?‘ என்று வருத்தத்துடன் கேட்கிறார்.
‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்‘ என்று கவிஞர் கண்ணதாசன் பாடியது நம் இரைப்பைக்கும் பொருந்தும்!
இத்தனை ரகசிய ஆனால் ஆரோக்கியமான இயக்கங்களுக்குக் காரணமான இரைப்பையை, இறைப்பை என்று சொல்லலாமா?