
ஆன்மீக நடைமுறைகளான பிரார்த்தனை, தியானம், யோகா போன்றவை மூலம் மன உள் அமைதியை அடைய முடியும், ஆன்மீக நம்பிக்கை எதிர்கால நம்பிக்கையை அளித்து, நேர்மறையான மனநிலையை வளர்க்கிறது, இது உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் வியாதிகள் விரைவில் குணமடைவதாக ஹன்டர்ஸ் பீஃல்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்மீக தொடர்பு நல்ல தூக்கம், இரத்த அழுத்தம் மற்றும் இதர உடல் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது. ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் மனதை கட்டுப்படுத்தி, சுய ஒழுக்கத்தை வளர்க்கலாம். அதன் வழியாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 'ஆன்மீக தேவையைப் பற்றிய உணர்வுடையவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.' என்கிறது பைபிள்.
10 முதல் 20 நிமிடங்கள் வரை நாம் செய்யும் பிரார்த்தனை நம் உடலில் உள்ள ரத்தம் அழுத்தத்தை குறைத்து அதனை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதயத்துடிப்பை இயல்பான நிலையில் வைக்க உதவுகிறது, தசைகளை தளர்த்தி ஹார்மோன்களின் இயக்கத்தை சீராக வைக்கிறது. இவைகளினால் உடலில் நோய் எதிர்ப்பு செல்களின் நடவடிக்கையை அதிகப்படுத்துகிறது என்கிறார்கள் மியாமி மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள்.
தினமும் தியானம் அல்லது பிரார்த்தனை போன்ற ஆன்மீக நடைமுறைகளில் ஈடுபடுங்கள். பணி ஓய்விற்கு பிறகு ஏதேனும் ஒரு ஆன்மீக குழுவில் இணைந்து பொழுதைக் கழிப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆன்மீக அனுபவங்களுக்கு ஒருவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் திறன் உண்டு என்பது உளவியல் மருத்துவர்களின் கருத்து. இத்தகைய அனுபவத்திற்குப் பின்னே உள்ள நரம்பியல் செயல்பாடுகள், ஒருவரை தோல்விகள், கவலைகளிலிருந்து மீட்டெடுக்க உதவும் என்கிறார் யேல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் மார்க் பொடென்சா.
ஆன்மீக உணர்வு மூளையில் எந்த பகுதியில் ஏற்படுகிறது நெற்றியின் பின்னால் உள்ள பகுதிக்கும் நடு மண்டைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் 'பரியேடல் கார்டெக்'சில் தான் என்கிறார்கள் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆன்மீகத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை ஆராய்ச்சிகள் உறுதிபடுத்துகிறது. திருமண பந்தம் அதிக ஸ்திரமாக இருப்பது, மதுபானத்தையும் போதைப் பொருட்களையும் குறைவாக பயன்படுத்துவது, தற்கொலை விகிதம் குறைவாக இருப்பது, அதோடு தற்கொலையைப் பற்றி எதிர்மறையான மனப்பான்மைகள், குறைவான கவலை, குறைவான மனச்சோர்வு, சுயநலமின்மை ஆகியவை ஆன்மீக சிந்தையுடைய மக்களிடம் காணப்படுவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. 'இரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆகியவை குறைவாக இருப்பதற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறது.' என்கிறது த மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்திரேலியா.
6,545 பேரை வைத்து 2002-ல் பெர்கிலியிலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா (UC) நடத்திய ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த உண்மை. ஆன்மீக கூட்டங்களில் எப்பொழுதாவது கலந்து கொண்டவர்களுடைய அல்லது ஒருபோதும் கலந்து கொள்ளாதவர்களுடைய இறப்பு விகிதத்தைவிட வாரத்திற்கு ஒருமுறை ஆன்மீக கூட்டங்களில் கலந்து கொண்டவர்களுடைய இறப்பு விகிதம் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
ஆன்மீக நம்பிக்கையற்றவர்களைவிட பலமான ஆன்மீக நம்பிக்கையுடையவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்தபின் ஏற்படும் துக்கத்தை அதிக வேகமாகவும் முழுமையாகவும் போக்கிவிடுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வு கூறுகிறது.
சமூக ஆதரவு நல்வாழ்வுக்கு ஒரு சிறந்த மூலாதாரம். ஆன்மீக அனுபவங்கள், பிரார்த்தனை, தொழுகை, மன்னிப்பு, சமய நம்பிக்கை போன்ற ஆன்மீகம் தொடர்பானவைகள் பலருக்கு மன அழுத்தத்திற்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது என்பதை அமெரிக்க மிசெளரி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.