பேரிக்காயின் அற்புதப் பலன்கள்!

பேரிக்காயின் அற்புதப் பலன்கள்!

‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று சொல்லப்படும் பெருமை மிக்கது பேரிக்காய். வளரும் குழந்தைகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த பேரிக்காயை குழந்தைகள் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள். பெரியவர்களும் எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறைதான் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த பேரிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கி இருப்பது பலருக்கும் தெரியாது. பேரிக்காய் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே கிடைக்கும். ஆப்பிள் சாப்பிடுவதில் இருக்கும் நன்மைகளை விட பேரிக்காயில் அதிக நன்மை இருக்கிறது. பேரிக்காயில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் வைட்டமின் B போன்ற அனைத்து சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. இனி, பேரிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் சில நன்மைகள் குறித்துக் காண்போம்.

சிறுநீரகப் பிரச்னைக்கு தீர்வு: பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது சீறுநீரகப் பிரச்னைக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

குழந்தைகள் வளர்ச்சி: இந்தக் காயில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமாக இருப்பதால் இதை வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் ஒரு பேரிக்காயை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்: இதயம் பலவீனமானவர்கள் மற்றும் இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு பேரிக்காயை தோலுடன் சாப்பிட்டால் அது இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாகும்.

தாய்ப்பால் சுரக்க: குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் பேரிக்காயை காலை, மாலை என இரண்டு வேலையும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

சர்க்கரை நோய் குறைய: பொதுவாக, பேரிக்காயை சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கிறது. அதேபோல், மலச்சிக்கல், குடல் புண், உடல் சூடு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றுக்கு பேரிக்காய் நல்ல பலன்களைத் தருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com