கொழுப்பைக் குறைத்து இதயம் காப்போம்!

கொழுப்பைக் குறைத்து இதயம் காப்போம்!

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, அலுவகத்தில் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்தவாறே வேலை செய்வது அல்லது நீண்ட தொலைவு உடலுழைப்பு இல்லாமல் காரில் பயணம் செய்துவது உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். இன்னும் சொல்லப்போனால் அது மெல்ல, மெல்ல இதயத்தை பாதிக்கும்.

‘உடலியக்கம் இல்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது’ என்கின்றனர் மருத்துவர்கள். நாம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும்போது குறைந்த அளவு கொழுப்பே கரைகின்றன. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து இரத்த நாளங்களை அடைத்துக்கொள்ளும். இவை தொடர்ந்தால் இரத்த நாளங்கள் சுருங்கிப் போய் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உடல் இயக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகரிக்கும்போது நிச்சயம் இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, அடிவயிற்றில் கொழுப்பு அதிகரிப்பது ஆபத்தானது. நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு இதயக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

மேலும், உடலியக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமனிகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.

பொதுவாக, அதிக வேலை செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால், உடலியக்கம் குறைந்தவர்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதுடன், இதயத்தின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சரி… இதற்கு என்ன வழி என்கிறீர்களா? இதற்கு மருந்து உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும்தான். தினமும் சுமார் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும், ஒன்றைரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவதும்தான். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். அல்லது வேறு வேலைகள் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

எல்லாவற்றையும்விட உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். தினசரி உணவில் ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதச் சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

எது எப்படி இருந்தாலும் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய ஆரோக்கியத்தின் நிலையை அறிந்துகொள்ள சீரான கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது முக்கியமானது. தொழில்முறை மருத்துவரை சந்தித்து அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும், இதயத்தையும் காக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com