'குப்பை' என்ற பெயருடன் ஒரு சூப்பர் மூலிகை!

Kuppaimeni mooligai
Kuppaimeni mooligai
Published on

குப்பை என்ற பெயருடன் இருக்கும் ஒரு மூலிகை பல வித்தைகளைச் செய்யும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... `குப்பை’ என்று நினைத்து அதிகம் கண்டு கொள்ளப்படாத மூலிகையான குப்பைமேனி, பல்வேறு நோய்களுக்கான தீர்வை கொடுக்கும் திறன் படைத்தது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி, அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து இடங்களிலும் வளர்கிறது போலும்!

குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha indica. நமக்கெல்லாம் ஒரு குடும்பம் இருப்பதைப்போல, தாவரங்களுக்கும் அதன் வளரியல்பு, குணாதிசயங்களைப் பொறுத்து குடும்பங்கள் உண்டு. அதில் குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது.

மேனியில் (தேகத்தில்) உண்டாகும் நோய்களை விரட்டுவதாலே, மேனி என்ற வேறு பெயரும் உண்டு குப்பை மேனிக்கு! அதுமட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனை வணங்கி, குப்பி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் குப்பைமேனியை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சரும நோய்களை அழிக்கும் சக்தி

விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு நீங்க, குப்பைமேனி இலையோடு கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்து சில நாள்கள் போட்டு வர அரிப்பு குறைந்து நோய் மறைவதைப் பார்க்கலாம். விளையாடும்போது உடலில் சிறு சிறு காயங்கள் ஏற்படும்போது, குப்பைமேனியுடன் கிருமிநாசினி குணம் நிறைந்த மஞ்சளைக் கூட்டி அரைத்துப் பூச, விளையாடும்போது ஏற்பட்ட வீரத் தழும்புகள் தோலோடு மறையும்.

கருஞ்சிவப்பு நிறத்துடன் தொடை இடுக்குகளில் அரிப்புடன் வரும் படர்தாமரை பிரச்னைக்கு குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு கூட்டி தடவி வர, நோயின் தீவிரம் குறையும். மூலிகை மருத்துவத்துடன் நல்ல சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால் படர்தாமரைக்கு நிரந்தர முடிவு கட்டலாம்.

குப்பைமேனி எண்ணெய்...

குப்பைமேனியை வைத்து எளிமையாக ஓர் எண்ணெய் தயாரிக்கலாம். நிறைய குப்பைமேனி இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். வெளிவரும் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொதிக்க வைத்தால் குப்பைமேனி எண்ணெய் ரெடி!

கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு குப்பைமேனி எண்ணெய் நன்மருந்து. புண்களில் தடவும் பூச்சு மருந்தாகவும் இந்த எண்ணெய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கப நோய்களுக்கு...

கோழையை (சளி) இளக்கி வெளியேற்றும் பண்பு கொண்ட குப்பைமேனியின் பொடியை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, பாடாய்ப்படுத்தும் இருமல் கட்டுப்படும்.

தலைபாரமாக இருக்கிறதா? குப்பைமேனி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட, உடனடியாகத் தலைபாரம் குறையும். சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும், துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுத்தால் போதுமானது.

மூட்டு வலி, வீக்கங்களுக்கு...

உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாற்றை, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதான தாத்தா, பாட்டிகளுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன்கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், வன்கொடுமை... பெண்களே! இதில் உங்கள் பங்கு என்ன?
Kuppaimeni mooligai

பாம்புக் கடிக்கு...

பாம்புக் கடிக்குக் கொடுக்கப்படும் சித்த மருந்துகளில் குப்பைமேனி தவறாமல் சேர்க்கப்படுகிறது எனும் உண்மையை இருளர் பழங்குடியினரிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். விஷமுறிவு மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள் இருளர் பழங்குடியினர். தங்களின் பாரம்பரிய மூலிகை அறிவைக் கொண்டு விஷத்தை முறிக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள்.

குப்பை என்று ஒதுக்கப்பட்டு, களைச்செடி எனப் பார்ப்பவர்களால் பிடுங்கி வீசப்பட்டு, பல இன்னல்களை அனுபவித்தாலும், மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து மக்களின் நலனுக்காகப் போராடும் மூலிகை குப்பைமேனி.

சூரிய ஒளியைப் பெறுவதற்காக, ஒவ்வோர் இலையும் அழகாக வெளியே நீட்டிக்கொண்டிருப்பது குப்பைமேனியின் சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சரியான போதனைகள்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி!
Kuppaimeni mooligai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com