
நமது முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த மளிகைப் பொருட்களை அஞ்சரைப் பெட்டியில் போட்டு வைத்து தினமும் உபயோகித்து வந்தார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சரைப்பெட்டி தவறாமல் இடம் பெற்றிருக்கும். மிளகு, சுக்கு, பெருங்காயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், வெந்தயம் முதலான பொருட்களை அன்றாடம் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இதுமட்டுமின்றி பலவிதமான பொடிகளை வீட்டிலேயே சுத்தமான மளிகைப் பொருட்களைக் கொண்டு அரைத்து பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இத்தகைய பொடிகளில் முதலிடம் வகிப்பது அங்காயப் பொடியாகும். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று தெரிந்து கொள்ளுவோம்.
ஐந்து முக்கியமான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இது அங்காயப் பொடி என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் 'ஐங்காயப் பொடி' என்று அழைக்கப்பட்ட இப்பொடியானது தற்போது மருவி 'அங்காயப் பொடி' என்று அழைக்கப்படுகிறது.
வேப்பம் பூ, சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளி வற்றல், தனியா விதை, மிளகு, சீரகம், வெந்தயம், திப்பிலி, சுக்கு, பெருங்காயம் முதலான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வாணலியில் வறுத்து அரைத்து அங்காயப் பொடி தயாரிக்கப்படுகிறது.
அங்காயப் பொடியானது வயிற்றுப் பிரச்சினைகளை எளிதில் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொடியாகும். இதை சாப்பிட்டால் ஜீரண சக்தியைத் தூண்டி நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்கும். உணவில் உள்ள சத்துக்களை உடல் சரியான அளவில் கிரகிக்கச் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. மிக முக்கியமாக, கொழுப்பைக் கரைக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் இதைக் கொடுக்கலாம்.
பொதுவாக இந்த பொடியை சாதத்தில் தூவி நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடுவது வழக்கம். மோரில் கலந்தும் இதைக் குடிக்கலாம். வேப்பம்பூ முக்கிய பங்கு வகிப்பதால் இது சற்று கசப்பாக இருக்கும்.
பிரசவித்த பெண்களுக்கு அங்காயப் பொடி கலந்த சாதம் சிறிதளவு சாப்பிடக் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக உள்ளது. இதன் பின்னரே மற்ற உணவுகளை சாப்பிடக் கொடுப்பார்கள்.
சில சமயங்களில் சற்று அதிக அளவில் உணவினை சாப்பிட்டு விட்டால் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாமல் போகக்கூடும். அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும். வாந்தி, குமட்டல் முதலான சிக்கல்களும் ஏற்படக் கூடும். ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுபவர்கள் வாரத்தில் ஒருநாள் அங்காயப் பொடியை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உணவின் மூலம் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்த்து விடலாம்.
அங்காயப் பொடியினை ஒரு நாளைக்கு ஒரு வேளை சிறிதளவு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் ஆற்றலும் இந்த பொடிக்கு உள்ளது. பக்க விளைவுகள் ஏதும் இல்லாத இந்த பொடி தற்போது கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நீங்களே வீட்டில் இதை சுலபமாக அரைத்து வைத்துக் கொண்டும் பயன்படுத்தலாம்.
நமது முன்னோர்கள் அனுபவசாலிகள். அனுபவத்தின் அடிப்படையில் பலவிதமான உணவுகளை உருவாக்கி சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் அங்காயப் பொடியைத் தயார் செய்து வைத்து வாரத்தில் இரண்டொரு நாட்கள் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.