அர்ஹர் தால் அளிக்கும் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள்!

துவரம் பருப்பு
Arhar dal

ர்ஹர் தால் (Arhar dal) எனப்படும் துவரம் பருப்பு வெஜிடேரியன் மற்றும் வேகன்களுக்கு அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கக்கூடிய ஒரு சிறந்த உணவாகும். இதில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. அனைத்து செல்களின் செயல்பாட்டிற்கும் தசைகளின் வளர்ச்சி மற்றும் சீரமைப்பிற்கும் புரோட்டீன் உதவக்கூடியது. இதிலிருக்கும் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக நடைபெறவும், உணவுப் பொருட்கள் குடலுக்குள் தங்கு தடையின்றி நகர்ந்து சென்று கழிவுகள் சிரமமின்றி வெளியேறவும் உதவுகிறது. மேலும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. நார்ச்சத்து வயிற்றுக்குள்ளிருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவிபுரிந்து, வாய்வு, வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இதில் ஃபொலேட், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம். இவை சக்தியின் உற்பத்தி, இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி, தசை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் போன்ற உடலின் இயக்கங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிபவை.

இதிலுள்ள கரையக்கூடிய நார்ச் சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவி புரிந்து இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன. மேலும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

அர்ஹரில் உள்ள அதிகளவு புரோட்டீனும் நார்ச்சத்தும் அடிக்கடி உண்டாகும் பசியுணர்வைத் தடுத்து, எடை குறைப்பிற்கு உதவுகின்றன. அர்ஹர் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை வேகமாக குறைக்க இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் போதுமே! 
துவரம் பருப்பு

இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அளவுகளில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன. வயது முதிர்ந்தவர்கள் இந்தப் பருப்பை அடிக்கடி உட்கொண்டு வந்தால் ஆஸ்ட்டியோபொரோஸிஸ் நோயையும் எலும்பு முறிவு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

இதிலுள்ள வைட்டமின் C, B6, இரும்புச் சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவாமல் தடுக்கவும் நோயை விரைவில் குணமாக்கவும் உதவுகின்றன.

அர்ஹரில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் நிலையான சக்தியை நாள் முழுவதும் உடலுக்கு வழங்க உதவுகிறது. இதனால் சக்தியின் அளவு குறைந்து உடல் சோர்வடைவது தடுக்கப்படுகிறது. பன்முகத்தன்மை கொண்ட துவரம் பருப்பை சாம்பார், உசிலி, அடை, வடை போன்ற பல வகை உணவுகள் தயாரிப்பில் சேர்த்து சமைத்து அதன் சுவையையும் அதன் மூலம் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் அனைவரும் அனுபவித்து மகிழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com