பள்ளிக் குழந்தைகளின் விருப்பமான உணவு தயிர் சாதம் ஆகும். மற்ற கட்டு சாதத்தைவிட தயிர்சாதத்தை சிறுவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்பர். மூன்று வேளையும் கூட தயிர்சாதத்தை விரும்பி உண்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
'பூலோக அமிர்தமாம்' தயிர்சாதம், எளிதில் ஜீரணமாகும். மூளை கூர்மையாக செயல்படவும் உதவும். பழைய சோற்றில் எருமைத் தயிர் ஊற்றி சாப்பிடுவோருக்கு தூக்கம் வரும். காரணம், எருமை தயிரில் கொழுப்பு மிகுதி. அது செரிக்க நேரமாகும். அதனால் சோம்பலும் தூக்கமும் வரும். பசுந்தயிரில் நல்ல கொழுப்பு அதிகம். எனவே எளிதில் செரிமானம் ஆகும்.
தயிர் சாதத்தில் இப்போது கருப்புத் திராட்சை, மாதுளை முத்துக்கள், இஞ்சி, பச்சை மிளகாய்த் துண்டுகள், கறிவேப்பிலை கொத்தமல்லி, கேரட் துருவல், (சிலர் காரா பூந்தி), ஆகியவை கலந்து கண்ணுக்கு கவர்ச்சியாகவும் நாவுக்கு ருசியாகவும் (colourful) பரிமாறுகின்றனர்.
பூலோக அமிர்தம்
நம் முன்னோர் தயிருக்கு நம்மை பழக்கியதற்கு முக்கியக் காரணம் அதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் ஆகும். பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு கூட ஏற்ற உணவு தயிர் சாதம் ஆகும்.
தயிர், நன்கு காய்ச்சிய பசும்பாலில் 5 மணி நேரம் மட்டும் புரை குத்தியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பேக்டீரியாக்கள் உற்பத்தி தரமானதாக இருக்கும். தயிரில் கடும் புளிப்பு கூடாது. பாலும் புளிப்பும் சரியாக இருந்தால் தயிர்சாதம் பூலோக அமிர்தம் ஆகும்.
லாக்டோ பேசில்லஸ்
பிறந்த குழந்தைக்குத் தயிர்சாதம் கொடுத்து அதன் வயிற்றில் லேக்டோ பேசில்லஸ் (lacto bacillus) என்ற பேக்டீரியா வளர, குழந்தை நல மருத்துவர் டாக்டர். சிகர்மானே என்பவர் முயற்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் போது இந்த டாக்டர், தான் நோபல் பரிசு பெற்ற ருஷிய விஞ்ஞானி இலியா மெகினோவைப் (1905) பின்பற்றியதாகத் தெரிவித்தார்.
தீயவை நீக்கி நல்லவை பெருக்கி
ருஷ்ய டாக்டர் மெகினோவ், வயிற்றில் செரிமானத்துக்கு மிகவும் உதவக் கூடிய பேக்டீரியாவாக தயிரில் உள்ள லேக்டோ பேசில்லசும், பிஃபிடியாவும் இருப்பதைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார். புளித்த பாலில் (கெட்டுப்போன பாலில் அல்ல] இந்த ஆக்கப்பூர்வமான உயிர்கள் இருப்பதை இவர் உலகுக்கு உணர்த்தினார். இவரைப் பின்பற்றி டாக்டர். சிகர்மானேயும் வயிறு மற்றும் குடல் வழிப்பாதையில் உணவு செரிமானமாக, தயிர் சாதத்தையே அனைவருக்கும் பரிந்துரைக்கிறார். உயிர் காக்கும் உணவு என்று மருத்துவ உலகில் அழைக்க முக்கிய காரணம், வயிற்றில் கெட்ட பேக்டீரியாக்களை வளர விடாமல் தயிரில் உள்ள லேக்டோ பேசில்லஸ் தடுத்து விடுவதும் ஆகும்.
உயிர் காக்கும் உணவு
அஜீரணம், பேதி, நோய்த் தொற்று, வாயுக்கோளாறு போன்றவற்றிற்குத் தயிர்சாதம் நல்லதொரு உணவும் மருந்தும் ஆகும். உடல் காக்கும் நோக்கத்திலும் நோய் தவிர்க்கும் கருத்திலும் உணவையே மருந்தாகக் கொண்டு வந்த நம் முன்னோர் சிறுதானியம், பயிறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர். இவை நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்தது. இரத்தக் கொழுப்பைச் சீரமைத்து, எலும்புகளை வலுவாக்கியது.
கிராண்ட் மாஸ்டரின் ஃபேவரிட்
மூளையைப் பயன்படுத்தி விளையாடும் சதுரங்க விளையாட்டில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வாங்கிய விசுவநாதனுக்கு விருப்பமான உணவு தயிர் சாதம் ஆகும்!
நல்லதை அறிவோம் ; நல்லதையே உண்போம்.