ஸ்லிம் ஆக வேண்டுமா? எச்சரிக்கை! இந்த டயட் உங்களை மரணத்திற்கு இட்டுச் செல்லும்!

Frutarian Diet
Frutarian Diet
Published on

சமீபத்தில் ஃப்ரூட்டேரியன்  எனும் டயட் முறையை தீவிரமாக கடைபிடித்து வந்த இளைஞர் ஒருவரின் மறைவு செய்தி நம்மை வருந்த வைத்து விழிப்புணர்வையும் விதைத்துள்ளது. அளவுக்கு மீறும் போது உடல் எடையைக் குறைக்க வேண்டும், ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். எதை செய்தால் எடை குறையும் என பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அவற்றில் சாதகமான அம்சங்களுடன் பின்விளைவுகளும் உண்டு என்பதையும் கவனிக்க வேண்டும்.

உண்ணும் உணவுகளில் கலோரி அளவு மற்றும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, பயிற்சியின் மூலம் உடல் உழைப்பைக் கூட்டுவது இவைகளே உலகமுழுவதும் எடைக்குறைப்பின் முக்கிய வழிமுறைகளாகிறது.

உடலுக்கு முக்கியமான மூன்று பெரும் ஊட்டச்சத்துகளாக மாவுச்சத்து (Carbohydrates) கொழுப்புச் சத்து (Fats) புரதச்சத்து (Protein) ஆகியவையே உள்ளது. இவற்றுள் மாவுச்சத்தைக் குறைத்தால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை அதிகப்படுத்த வேண்டும் என்கிறது மருத்துவம்.

அதேபோல உடலின் வளர்ச்சிக்கும், தசைகள் மற்றும் திசுக்களின் மறுநிர்மானத்திற்கும் உதவும் புரதச்சத்தை அறவே குறைப்பது பலவிதமான பின்விளைவுகளை தரும் எனக் குறிப்பிடுகிறது. மேலும் உடல் எடை குறையும்போது ஏற்படும் நுண்சத்து, தாது உப்பு குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு பலரும் கவனிக்கத் தவறும் விஷயம் எடை இழக்க மாவுச்சத்தையும் குறைத்து கொழுப்புச்சத்தும் இல்லாமல் புரதசசத்தும் தேவையான அளவு உட்கொள்ளாமல் தாங்களாகவே யூட்யூப், வலைதளங்கள் மூலம் ஒரு டயட்டை தேர்ந்தெடுப்பது தான். ஒரு விஷயத்தில் இறங்குமுன் அது குறித்து அதன் நன்மை தீமைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து தகுந்த நிபுணர் உதவியை மேற்கொள்வதே சிறந்தது.

முழுக்க பழங்களையும் பழச்சாறுகளையும் உணவாக உட்கொள்ளும் டயட் முறையான 'ஃப்ரூட்டேரியன்'. தற்போது இளைஞர் மறைவினால் பெரும்பாலானவர்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

ஃப்ரூட்டேரியன் உணவு முறை கடைப்பிடிக்கும் போது சில வைட்டமின்கள் குறிப்பாக விட்டமின் சி போன்றவவை அதிகமாக கிடைக்கும். ஆனால் அவற்றில் பி12 , இரும்புச் சத்து, கால்சியம், கொழுப்பு அமிலங்கள், விட்டமின் டி ஆகியவை மிக மிகக் குறைவு. இதனால் நரம்பு அழற்சி, மூளைத் தேய்மானம், எலும்பு தேய்மானம் ரத்த சோகை ஆகிய பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மோடி ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள்: மத்திய அரசு தகவல்..!
Frutarian Diet

பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும் என்றாலும் அதுவே அளவுக்கு மிஞ்சினால், நார்ச்சத்து குடலில் வாயுவை அதிக அளவு உற்பத்தி செய்து வயிற்று உப்புசத்தை உண்டாக்கலாம். பழங்களில் உள்ள நீர்ச்சத்து நன்மை தரும் என்றாலும் சர்க்கரை அளவுகளும் அதிகமாக இருப்பதால் பழங்களை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது க்ளூகோஸை உடல் கிரகித்துக் கொள்ள இன்சுலின் சுரப்பு ஏற்பட்டு அதிக அளவு நீரை சிறுநீரகங்கள் சேமிக்கும் பளு உண்டாகிறது.

மேலும் பழங்களில்  கல்லீரலால் மட்டுமே கிரகிக்கக்கூடிய சர்க்கரையான ஃப்ரக்டோஸ் அதிகமாக உட்கொள்ளப்படும் போது கல்லீரல் அதிகமான அளவில் கொழுப்பை உற்பத்தி செய்து உள்ளுறுப்புகளிலும் தன்னகத்தே சேமிக்கும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேரும் பாதிப்பு ஏற்படலாம்.

உடல் பருமன், பிசிஓடி, நீரிழிவு கல்லீரல் கொழுப்பு நோய்
உள்ளிட்ட இன்சுலினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான அளவு பழங்கள் வழியான ஃப்ரக்டோஸை உட்கொள்ளும் போது அது இன்சுலின் எதிர்ப்பு நிலையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள்.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 5 சர்வதேச மன்னிப்பு தினம்: மன்னிப்பு மனக்காயங்களை ஆற்றும் மாமருந்து ...!
Frutarian Diet

இப்படி நன்மை மற்றும் தீமை தரும் பழங்களை அதன் அளவறிந்து சாப்பிட வேண்டும். அதை விடுத்து அவற்றையே முழு உணவாக மாற்றிக் கொண்டால் அதுவே உடல் நலனுக்குத் தீங்காகும். இதை புரிந்து அவரவர் உடல் வாகுக்குத் தகுந்த டயட்களை கடைபிடிப்பது நல்லது.  

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com