
முளை கட்டிய பயறு வகைகளை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
நம் உடல் முழு ஆரோக்கியத்துடன் இயங்க ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் தேவை. இவற்றை நாம் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் பெற்று வருகிறோம். கோதுமை, வெந்தயம், பட்டாணி, பாசிப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை போன்றவற்றை அப்படியே சமைத்து சாப்பிடுவதை விட, முளைக்க வைத்து பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். முளை கட்டிய பயறு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
முளை கட்டிய பயறு (sprouted) உணவுப் பொருட்கள் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் பயோஆக்டிவ் கூட்டுப்பொருட்கள் கொண்டவை. இவை இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவி புரியும்.
முளைவிட்ட பயறுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சிங்க் மற்றும் வைட்டமின் A சத்துக்கள், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, பருக்கள் இல்லாத பளபள சருமம் பெற உதவி புரிகின்றன.
முளை கட்டிய பயறு பொருட்களில் நார்ச்சத்து மற்றும் இயற்கை முறையில் கிடைக்கும், சிறப்பான ஜீரணத்திற்கு உதவக் கூடிய என்சைம்களின் அளவும் அதிகம் உள்ளன. இவை இரைப்பை குடல் இயக்கங்கள் சிக்கலின்றி நடைபெறவும், கழிவுகள் வெளியேறவும், ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படவும் உதவி புரிகின்றன.
தானிய மற்றும் பயறு விதைகளை முளை விடச் செய்வதால் அதிலுள்ள ப்ரோட்டீன், இரும்புச் சத்து மற்றும் B வைட்டமின்களின் அளவு அதிகரிக்கிறது. இவை அதிக அளவு சக்தியை உற்பத்தி செய்து உடல் சோர்வு குறைய உதவி புரிகின்றன.
ஸ்பிரௌட்டட் உணவுப் பொருட்களில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள், இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகள் குறைய உதவி செய்கின்றன. இதனால் இதயதிற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்படைவது தடுக்கப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்பாடடைகிறது.
முளை கட்டிய உணவுப் பொருட்களில் வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் அதிகம். இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து, தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதலை தடுக்க உதவி புரிகின்றன.
முளை கட்டிய பொருட்கள் குறைந்த அளவு கலோரிகளே உடையவை. ஆனால் இவற்றில் ப்ரோட்டீனும் நார்ச்சத்துக்களும் அதிகம். இவை நீண்ட நேரம் வயிற்றில் தங்கி, பசி ஏற்படும் உணர்வைத் தடுப்பதால், உட்கொள்ளும் உணவுகளின் அளவு குறைந்து, உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்கவும் ஸ்பிரௌட்ஸ் உதவி புரிகின்றன.
பக்க விளைவுகள்: முளை கட்டிய உணவுப் பொருட்களை சமைக்காமல் சாப்பிடும்போது சில நேரம் அவை வயிற்று உப்புசம் மற்றும் உணவு வழி நோய்த் தொற்று (foodborne disease) களால் உண்டாகும் வயிற்றுவலி, வாந்தி போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பும் உருவாகும். ஆகவே முளை கட்டிய உணவுப் பொருட்களை நன்கு கழுவி லேசாக வேக வைத்து சாப்பிடுவதே நலம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)