இஞ்சி, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து பசு நெய்யில் கிளறி மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் உண்டு வர கர்ப்பம் தங்கும் .
இஞ்சி சாறுடன் பசும்பால் கலந்து சாப்பிட வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
இஞ்சி சாற்றில் சிறிது தண்ணீரும் உப்பும் சேர்த்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட வாத பித்த இருமல் குணமாகும்.
இஞ்சி லேகியம்:
தோல் சீவிய 50 கிராம் இஞ்சியை பசு நெய்யில் வறுத்து மிளகு தூள் 3கிராம், 2கிராம் திப்பிலி பொடி,1கிராம் கண்டத்திப்பிலி பொடி ஒரு கிராம் மூங்கில் உப்புசேர்த்து கலக்க வேண்டும். இத்துடன் இரண்டு கிராம் ஜாதிக்காய், ஏலக்காய், சுக்கு பொடிகள் சேர்த்து 50கிராம் வெல்லத்தை சேர்த்துக் கிளறி லேகியம் தயாரிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலிக்கு இதை கொடுக்கலாம்.
வறட்டு இருமல் சளி நீங்க
200 கிராம் அதிமதுரப் இடித்து மண்சட்டியில் வறுத்து 500மில்லி இஞ்சிசாறு சேர்த்துக் கலந்து துணியால் வேடுகட்டி வெயிலில் மூன்று நாட்கள் வைத்தால் தூள் தான் நிற்கும். இந்த தூளை காலை இரவு உணவுக்கு முன் வெந்நீரில் கால் ஸ்பூன் சாப்பிட இருமல், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும்.
இஞ்சி ஊறுகாய்
500 கிராம் இஞ்சியை தோல் சீவி ஜாடியில் துண்டுகளாக அரிந்து சேர்க்கவும். அதில் 100கிராம் பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து சேர்க்கவும். அதில் 4 கரண்டி இந்துப்பு சேர்த்து துணியால் கட்டி வெயிலில் வைத்து விடவேண்டும். 2 நாட்களுக்குப் பிறகு வாணலியில் கால் கிலோ நல்லெண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெயிலில் காயவைத்து இஞ்சிக் கலவையில் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து சாறு சுண்டியதும் பத்திரப்படுத்தவும் . இந்த இஞ்சி ஊறுகாய் உமட்டல், வயிறு உப்புசத்தைப் போக்கும். உடலுக்கு சிறந்தது.
இஞ்சி உப்பு
கால் கிலோ இந்துப்பை மண்சட்டியில் இட்டு அதில் 150மில்லி கொதிக்கவைத்து இஞ்சிச் சாற்றை ஊற்றி வேடு கட்டி வெயிலில் வைக்கவும். சாறு சுண்டியதும் மறுபடியும் 150 மில்லி இஞ்சி சாறு சேர்த்து வெயிலில் வைக்கவும். இதுபோல் 4 முறை செய்யவும். இஞ்சியின் மருத்துவ குணங்கள் அனைத்தும் இந்துப்பில் ஏறிவிடும். அதை பொடி செய்தால் இஞ்சி உப்பு தயார். இது வயிறு தொடர்பான நோய்களை தீர்ப்பதுடன் தாகம் வறட்சி கண் எரிச்சலும் சரியாகும்.
இஞ்சி அரிசி திப்பிலி
100 கிராம் அரிசித் திப்பிலியை பொடித்து அதில் 100 மில்லி இஞ்சி சாற்றைக் கலந்து உலர வைக்கவும். நான்கு முறை இப்படிச் செய்யவும். இது இஞ்சி அரிசி திப்பிலி ஆகும். காலை உணவிற்குப் பிறகு அரை ஸ்பூன் எடுத்து நாட்டுச் சர்க்கரை கலந்து வெந்நீரில் குடிக்க தொண்டை சார்ந்த பிணிகள் பறந்தே போகும்.
தொப்பையை குறைக்க
அரைகிலோ இஞ்சி வாங்கி இடித்து சாறு எடுத்து அடுப்பில் வைத்து சுண்டி ஆறியதும் சுத்தமான தேன் சேர்த்து தினமும் ஒரு ஸ்பூன் காலை மாலை சாப்பிட தொப்பை குறையும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)