
மாம்பழம் சாப்பிட்டு இருப்பீர்கள்.. பச்சை மாம்பழங்கள் சாப்பிட்டதுண்டா? அதென்ன?
மாம்பழங்கள் பழுப்பதற்கு முன் இருக்கும் நிலையில்தான் 'பச்சை மாம்பழங்கள்' என அழைக்கப்படுகின்றன.
பச்சை மாம்பழங்களை மிளகாய் தூள், உப்பு தூவி சாப்பிடும் போது அலாதி சுவை கொண்டதாக நம் நாவில் நீரூற வைக்கிறது.
பச்சை மாம்பழங்களில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அவை ஒரு 'சூப்பர் ஃபுட்' என்று கருதப்படுகின்றன. தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்த இந்த பச்சை மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காண்போம்.
ஆரோக்கியமான பார்வை, வலுவான முடி மற்றும் மென்மையான சருமத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ இதில் நிறைந்துள்ளது. எனவே இது நமது பார்வை மற்றும் தோற்றத்தை பராமரிக்கும்.
சருமத்தை உறுதியாக வைத்திருக்கவும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அவசியமான வைட்டமின் சி நிறைந்த பச்சை மாம்பழங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் பிற வயதான அறிகுறிகளைத் தடுத்து இளமைத் தோற்றம் தருகின்றன. மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றன.
நரம்பு இரத்த உறைவு அல்லது பிற இரத்த ஓட்டம் அல்லது இரத்த நாளங்கள் தொடர்பான நிலைமைகளுக்கு நிவாரணம் தரும் வைட்டமின் கே பச்சை மாம்பழங்களில் காணப்படுகிறது.
இதிலிருக்கும் ஃபைபர் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆம், உங்கள் செரிமான சக்தியை சீராக்க உணவில் பச்சை மாம்பழங்களைச் சேர்ப்பது ஒரு நல்ல வழி.
பச்சை மாம்பழங்கள் கல்லீரலில் இருந்து பித்த அமிலங்கள் வெளியேறுவதைத் தூண்டுகின்றன. அவை கொழுப்பு உறிஞ்சுதலை மேம்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதால் கல்லீரலை ஆரோக்கியமானதாக வைக்கின்றன.
வலுவான பற்களை ஊக்குவிக்குவித்து ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளைத் தடுக்கின்றன.
இத்தனை நன்மைகள் இருந்தாலும்,
பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு அதிகமாக பச்சை மாம்பழங்களை சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தொண்டை புண் மற்றும் பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், பச்சை மாம்பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை அடிக்கடி சந்திப்பவர்கள் பச்சை மாம்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்கள் பச்சை மாம்பழங்களைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் இருந்து அவற்றை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமை உள்ளவர்கள் பச்சை மாம்பழங்களை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சரும எரிச்சல், அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.