
முன்பை விட இப்பொழுது கோவைக்காயை சமைத்து சாப்பிடுவதில் அனைவரும் விருப்பம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சக்தி கோவைக்காய்க்கு இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருப்பதுதான். அதை எப்படி சமைத்து சாப்பிடலாம் அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
பந்தலில் படரும் கொடி இனங்களில் கோவைக்காயும் ஒன்றாகும். இனிப்பு, கசப்பு என இரு சுவைகள் கோவைக்காயில் காணப்படுகின்றன. கற்கோவை, வரிகோவை, அப்பைக் கோவை, செங்கோவை, கருங்கோவை என்பன இதன் இனங்கள் ஆகும். அவற்றிலும் கோவையின் உருவம் மற்றும் நிற வேறுபாடுகளை கொண்டு மூவிரல்கோவை, ஐவிரல் கோவை, நாமக் கோவை என மூவகைப் பிரிவுகள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோவைக்காயை அரிந்து காய போட்டு உப்பு நீரில் முக்கி எடுத்து உலர்த்தி பதப்படுத்தி வைத்துக் கொண்டால் உணர்த்திய வற்றலை எண்ணெய் விட்டு பொரித்து உண்ணலாம். அப்படி உண்ணும் போது ருசியின்மை, நீங்காத வெப்பம் , சுரகப தோஷம் இவை நீங்கும். இதை வற்றல் குழம்பாக வைத்தால் புளி சேர்க்காமல் இருப்பது நல்லது.
புளி சேர்க்காத கோவைக்காயை பொரியல் செய்து சாதத்துடன் சேர்த்து பிசைந்து உண்ணலாம். இதனால் அஜீரணம் நீங்கி பசியை உண்டாக்கும்.
கோவைக்காயை வாரத்தில் மூன்று நாட்கள் நல்லெண்ணெயில் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் போட்டு தாளித்து தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி இஞ்சி சேர்த்து பொரியல் செய்து பகல் அல்லது இரவு உணவுடன் சாப்பிட்டு வர, மாத்திரை மருந்து இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்கிறது சித்தர் பாடல் ஒன்று.
கோவைக்காயின் தண்டு அல்லது கிழங்கு பகுதியை கசாயம் செய்து கொடுக்க நீர்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும்.
நாக்கில் புண் இருந்தால் கோவைக்காயை பச்சடியாக செய்து சாப்பிடலாம். நல்ல குணம் கிடைக்கும்.
கோவை இலையை கொதிக்கின்ற நீரில் இட்டு 15 நிமிடங்கள் சென்ற பின்பு வடிகட்டி வேளைக்கு 50 மில்லி வீதம் கொடுக்க உடல் சூடு, சொறி ,சிரங்கு, நீர் அடைப்பு, இருமல் போன்றவை நீங்கும்.
கோவைக்காயில் இரும்பு சத்து கணிசமாக உள்ளது. வைட்டமின்களும் உள்ளன. இதனை சுவையான கூட்டு, அவியல், கறி, வற்றல் வதக்கல் என உணவு வகையறாக்களில் செய்து சாப்பிட்டு வரலாம். கோவை கீரையை கடையல், மசியல் செய்து பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து உண்ணலாம். இந்தக் கீரையை மற்ற கீரையுடன் சேர்த்து கலப்பு கீரையாக பயன்படுத்தினால் அதன் கசப்பு சுவையும் மாறும்.
ஆதலால் இவ்வளவு நன்மை செய்யும் இந்த காயில் முறைப்படி எதை சேர்க்க வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியம் காப்போம்.