காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலையான ஆற்றல் நுகர்வு பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் நிறுவப்பட்டது. எரிசக்தியைப் பாதுகாக்க, தேசிய அளவிலான ஆற்றல் பாதுகாப்பு உத்திகள் மற்றும் தனி மனிதர்களின் பங்கு பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எரிசக்தி பாதுகாப்பு: தொழில்களின் விரிவான வளர்ச்சி, நகரமயமாக்கல், அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவற்றுடன் ஆற்றலின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. இயற்கை வளங்களின் குறைப்பு, அதிகரித்த கார்பன் உமிழ்வு, காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இவற்றை எதிர்கொள்வதற்கு ஆற்றல் சேமிப்பு எனப்படும் எரிசக்தி பாதுகாப்பு இன்றியமையாதது.
எரிசக்தியை சேமிப்பதில் தனி நபர்களின் பங்கு, ஆற்றல் திறன் உள்ள உபகரணங்கள் பயன்பாடு: வீடுகளில் ஐந்து நட்சத்திர குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற உயர் ஆற்றல் திறன் மதிப்பீடுகளைக் கொண்ட சாதனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். விளக்குகள் மின்விசிறிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்பாட்டில் இல்லாதபோது அணைத்து வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். உணவை விரைவாக சமைத்து முடிக்க பாத்திரங்களை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
எல்இடி விளக்குகள்: வழக்கமான பல்புகளை மாற்றிவிட்டு ஆற்றல் சேமிப்பதற்காக எல்இடி விளக்குகளைப் பொருத்த வேண்டும். அவை கணிசமான குறைந்த ஆற்றலை பயன்படுத்தி, நீண்ட காலம் நீடித்து உழைக்கக் கூடியவை.
மறுபயன்பாடு / மறுசுழற்சி: ஆற்றலை சேமிக்க கழிவுகளை குறைத்து, மறுசுழற்சி செய்வதை பயிற்சி செய்ய வேண்டும்.
கார்பன் உமிழ்வை குறைத்தல்: ஒரு வீட்டில் இருக்கும் மூன்று நபர்களுக்கு இரண்டு இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் குறைந்த அளவு வாகனங்களைப் பயன்படுத்தும்போது கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. இது காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளைத் தணிக்க உதவுகிறது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தப் பழக வேண்டும்.
தெர்மோஸ்டர்ட்டுகள்: ஹீட்டிங் மற்றும் கூலிங் செயல்முறைகளுக்கு ப்ரோக்ராமிங் செய்யக்கூடிய அல்லது ஸ்மார்ட் தெர்மோஸ்டார்டுகளை நிறுவ வேண்டும். வெப்பம் மற்றும் குளிரூட்டும் தேவைகளை குறைக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைத்து, வீட்டு இன்சுலேஷனை மேம்படுத்த வேண்டும்.
தேசிய அளவிலான ஆற்றல் பாதுகாப்பு உத்திகள்:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு: புதை வடிவ எரிபொருட்கள் மீதான சார்ந்திருத்தலை குறைக்க சூரிய, காற்று, நீர் மற்றும் புவி வெப்ப ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் தொழில் துறை செயல்முறைகளுக்கான ஆற்றல் திறன் தர நிலைகளை செயல்படுத்துதல் வேண்டும். சாலையில் தனிப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்களை விரிவுபடுத்தி மேம்படுத்தப்பட வேண்டும்.
ஸ்மார்ட் க்ரிட்: மின்சார வினிகோய் விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்தும் ஸ்மார்ட் க்ரிட் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வரி சலுகைகள் மற்றும் நிதிச் சலுகைகளை வழங்க வேண்டும்.
அரசாங்க விதிமுறைகள்: கிரீன் ஹவுஸ் வாயு உபயோகத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதுகாப்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் விதிமுறைகளை நிறுவ வேண்டும். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்களுக்கு கற்பிக்க வேண்டும். அதற்காக தேசிய பிரச்சாரங்களை நடத்த வேண்டும்.
புதிய ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பொருள்களுக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வேண்டும். கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஆற்றல் பயன்பாட்டை குறைக்க நகர்ப்புற வளர்ச்சியில் நிலையான வடிவமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கான ஆற்றல் தணிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் மானியம் வழங்கப்பட வேண்டும்.