
கங்காரு பராமரிப்பு:
கங்காரு பராமரிப்பு என்பது புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசத்தையும் குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளும் உடல்ரீதியான பிணைப்பின் சக்தியையும் குறிக்கிறது.
கங்காரு பராமரிப்பின் அவசியம்:
குழந்தை கிட்டத்தட்ட பத்து மாதங்கள் வரை தாயின் கருவறையில் கதகதப்பாக பாதுகாப்பாக குடியிருக்கிறது. அது இந்த மண்ணில் பிறந்ததும், தாயின் கருவறையில் இருந்த கதகதப்பைத் தருவது மிக அவசியம். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் கட்டாயம் அதிக நேரம் பெற்றோர் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொள்ள வேண்டும். அதனால் நிகழும் மாயாஜாலங்கள் நம்பமுடியாததாக இருக்கும். சிசுவின் வெப்பநிலை சுவாசம் மற்றும் இதய துடிப்பு சீராக இருக்கும்.
செய்முறை:
பிறந்த பச்சிளம் குழந்தையை வெறும் டயப்பர் மட்டுமே அணிவித்து, தாய் அல்லது தந்தை, வெற்று மார்பில் நேரடியாக தன் உடலோடு சிசுவை சேர்த்து அணைத்துப் பிடித்திருக்கும் முறையே கங்காரு பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை கங்காரு தன் தாயின் பையில் மிகவும் பாதுகாப்பாகவும் நெருக்கமாகவும் இருப்பதை இந்த முறை உணர்த்துகிறது.
கங்காரு பராமரிப்பு பச்சிளம் குழந்தைகளுக்கு தரும் நன்மைகள்
ஆரோக்கிய மேம்பாடு:
பெற்றோரின் உடல் சூடு குழந்தைகளின் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக பிரசவத் தேதிக்கு முன்பே பிறந்த குழந்தைகள் அல்லது குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு இந்த முறை மிக மிக அவசியமானது. இந்தக் கங்காரு பராமரிப்பு குழந்தையின் இதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் ஆக்சிஜன் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒட்டுமொத்த சிசுவின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
தொற்று அபாயம் குறைதல்:
பெற்றோரின் தோலிலிருந்து சிசு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பெறுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. தொற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
மூளை வளர்ச்சி:
பெற்றோரின் இதயத்துடிப்பு மற்றும் மென்மையான ஸ்பரிசம் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் தாய் தந்தையரின் பேச்சுக் குரல் கேட்கும் போது அது ஒரு நெருங்கிய தொடர்பை உணர்கிறது.
ஆழ்ந்த உறக்கம்:
பச்சிளம் சிசுக்களை கங்காரு பராமரிப்பு முறையில் வைத்திருக்கும் போது ஆழமாகவும் நீண்ட நேரமும் உறங்குகின்றன. இது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
ஆரோக்கியமான எடை:
கங்காரு பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் உடல் எடை சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ப்ரீ மெச்சூர் பேபி எனப்படும் பிரசவத்தேதிக்கு முன்பே பிறந்த குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சியும் எடையும் கூட இந்த முறை உதவும்.
தாய்ப்பால்:
தாய் தன்னுடைய குழந்தையை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொள்ளும் போது தாய்க்கு பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தையும் தாய்ப்பாலை விரும்பி அருந்தும்.
கங்காரு பராமரிப்பு பெற்றோருக்கு தரும் நன்மைகள்
சிசுவை நெருக்கமாக சேர்த்து பிடித்திருக்கும் போது அது உணர்ச்சி ரீதியான பிணைப்பை வலுப்படுத்துகிறது. குழந்தையின் மேல் ஆழமான பாசமும் பற்றும் ஏற்படும்.
இளம் பெற்றோர் தம் குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து செயல்பட கற்றுக் கொள்கிறார்கள். குழந்தையைப் பராமரிப்பதில் அவர்களுக்கு நம்பிக்கையை வளர்க்கிறது.
குழந்தையை மார்புடன் சேர்த்து அணைத்துக்கொள்ளும் போது பெற்றோருக்கு மனப்பதட்டமும் அழுத்தமும் குறையும். மருத்துவமனையில் இருக்கும் காலகட்டங்களில் பெரும் நம்பிக்கையை அந்த சிசு பெற்றோருக்கு அளிக்கும்.
ஒரு தாயால் எளிதாக குழந்தைக்கு தாய்ப்பால் தர முடியும். தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும். குழந்தைக்கு பால் தருவது மிக எளிதாக நடக்கும்.
எனவே புதிதாய் பிறந்த சிசுக்களை தந்தையும் தாயும் அதிக நேரம் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தை வளர்ந்து பெரிதான பின்பும் பெற்றோருக்கும் குழந்தைக்கும் வாழ்நாள் முழுவதும் பயன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.