
சொடக்கு தக்காளியை நாம் அனைவருமே சிறுவயதில் விளையாட்டு பொருளாக பயன்படுத்தியிருப்போம். இது மழைக்காலங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மூலிகைச் செடி. இதை வெடிக்காய், குபந்தி, பலூன் தக்காளி, சொடக்கு தக்காளி என்று அழைப்பார்கள். இப்பதிவில் இதனுடைய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.
சொடக்கு தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையாமின், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, நியாசின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, கேல்சியம், புரதம் ஆகியவை இருக்கிறது. இத்தனை சத்துக்களும் இந்த சின்ன அளவிலான தக்காளியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
1. அனீமியா குணமாகும்
ரத்தச்சோகை பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வர ரத்தச்சோகை குணமாகும். இதில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவும். ரத்த அளவு குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதால் புதிய ரத்தம் உற்பத்தியாகி உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும்.
2. கல்லீரல் புதுப்பொலிவு
இந்த பழத்தை சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் உள்ள செல்கள் புதுபிக்கப்பட்டு கல்லீரல் புதுபொலிவுப் பெறும். எனவே, கல்லீரல் சம்மந்தமான பிரச்னை இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
3. நரம்பு மண்டலம் பலம் பெறும்
நரம்பு மண்டலம் சீராக செயல்பட மிகவும் அவசியமான சத்து வைட்டமின் பி ஆகும். சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி1,பி2 சத்துக்கள் அடங்கியிருக்கிறது. நரம்பு சம்மந்தமான நோய்கள் இதை சாப்பிட்டு வருவதால் தீரும். முக்கியமாக கீழ்வாத நோயால் ஏற்படும் மூட்டு வலி, வீக்கத்தை குணமாக்கும்.
4. மூளை செயல்திறனை அதிகரிக்கும்
சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வர மூளையில் உள்ள ரத்த ஓட்டம் சீராக இயங்கும். நியாபக சக்தி அதிகரிக்கும். எனவே, நினைவாற்றல் சம்மந்தமான பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சொடக்கு தக்காளி சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.
5. கண்களின் ஆரோக்கியம்
சொடக்கு தக்காளி கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் ஏ அடங்கியுள்ளது. எனவே, கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் சொடக்கு தக்காளியை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். ஆகவே, சொடக்கு தக்காளியை இனி உங்க உணவுடன் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)