ஆலிவ் என்ற பெயர் வந்தாலே நம் நினைவில் இருப்பது என்னவோ ஆலிவ் எண்ணெய் தான். ஆலிவ் எண்ணெய் மட்டுமல்ல, அதன் இலைகள் கூட மருத்துவ குணம் மிக்கவை.
ஆலிவ் இலைகளில் பல சக்திவாய்ந்த கூறுகள் உள்ளன. அவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆலிவ் இலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
சரும பாதுகாப்பு:
ஆலிவ் இலைகளை அரைத்து பேஸ்டாக்கி அதை முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மற்றும் அதனால் உண்டாகும் வடுக்களை மறைய செய்ய உதவும். ஆலிவ் இலை சாறு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பொலிவானதாக மாற்றுகிறது. மாசு மற்றும் மங்குகளையும் நீக்குகிறது. இதனால் முகம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம்:
ஆலிவ் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஆலிவ் இலைகளை மென்று தின்று வந்தாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். ஆலிவ் இலைகளில் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது. இரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்களின் தாக்கத்தையும் குறைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி:
ஆலிவ் இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். ஆலிவ் இலைகளில் பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. ஆலிவ் இலைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லை நீங்கும். ஆலிவ் இலைகளில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அடிக்கடி காய்ச்சல் வருவதிலிருந்து பாதுகாக்கிறது. ஆலிவ் இலைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டு வலி மற்றும் முட்டு வீக்கத்தைக் குறைக்கிறது.
பொதுவாக ஆலிவ் இலைகள் இந்தியாவில் கிடைப்பது அரிது. பதப்படுத்தப்பட்ட ஆலிவ் இலைகள், ஆலிவ் இலை சாறு மற்றும் ஆலிவ் இலை சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை சந்தையில் கிடைக்கின்றன. இந்த மருத்துவ குணங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபரின் ஆரோக்கியம் சார்ந்தவை. அதனால், உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி பயன்படுத்தவும்.