
அன்னாசிப்பழத்தில் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்...
எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப் பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களை தாயகமாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது அன்னாசிப் பழம் எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்னாசிப்பழம் பார்ப்பதற்கு கரடுமுரடான பூப்போல இருந்தாலும், உள்ளே இனிப்பாகவும், சற்று புளிப்பு சுவையும் கொண்ட பழமாகும்.
அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி பழத்தை தினமும் சாப்பிடலாம்.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
அன்னாசிப் பழங்களில் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகிறது. இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும், உடலின் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தோராயமாக 165 கிராம் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் உள்ளது.
அன்னாசியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றன. எனவே இந்த பழம் எடையைக் கட்டுப்படுத்த நினைப்போருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. பசியை கட்டுப்படுத்தி அதிகப்படியான உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் இது உதவுகிறது.
அன்னாசி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க இது உதவ கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அன்னாசியில் உள்ள வைட்டமின் C யின் முக்கிய செயல் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்வதுதான். அதனால்தான் இதை புண் ஆற்றும் வைட்டமின் என்று கூறுவார்கள். நம்முடைய இரத்த நாளங்களின் சுவர்களுக்கும், சருமத்திற்கும், அங்கங்களுக்கும் மற்றும் எலும்புகளுக்கும் தேவையான புரதத்தை கொலாஜன் வழங்குகிறது. எனவே வைட்டமின் C சத்து உடலில் அதிகப்படியாக இருக்கும்போது, உடலில் ஏற்படும் புண் மற்றும் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மை உண்டாகிறது.
அன்னாசிபழம் உண்பதால் மலச்சிக்கல், வயிற்று போக்கு, குடல் எரிச்சல், இரத்த கட்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் நீங்கும். அதிக அளவில் நார்ச்சத்து அன்னாசியில் இருக்கிறது. இதனால் உண்ணும் உணவு செரிமான குழாயில் நல்ல முறையில் எளிமையாக செரிமானம் ஆகிறது. இது மட்டுமல்லாமல், இது வாய்வு மற்றும் செரிமானம் ஏற்படுத்தும் திரவங்களை உமிழ்கிறது. இந்த திரவங்கள் உணவு எளிதில் செரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது மலத்தை இலக்குகிறது. எனவே வயிற்று போக்கு பிரச்னை இல்லாமல் போகிறது.
ஒரு நாளைக்கு ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும், நமக்கு எல்லா நன்மைகளும் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்..