அசைவர்களை சைவர்களாக மாற்றும் பலாக்காய்!

Raw Jackfruit
Raw Jackfruit
Published on

சாதாரணமாக பலாக்காய் சீசன் வந்துவிட்டால் பலா பிஞ்சு, பலாக்காய், பலாப்பழம், பலாக்கொட்டை என்று அனைத்தையும் விதவிதமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தும்போது அதில் எதை சேர்க்கலாம்? எதை தவிர்க்கலாம்? என்பதை புரிந்து கொள்ள முடியும் . அதைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு.

சத்து நிறைந்த சைவ உணவு:

பலாக்காயில் வைட்டமின்களும் தாதுக்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்தக் காயை சமைத்து உண்ணும் பொழுது இறைச்சியை உண்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அசைவ பிரியர்களும் சொல்வதை கேட்கலாம். அந்த வகையில் பலாக்காய் நிறைய அசைவர்களை சைவர்களாக மாற்றி இருக்கிறது என்று கூற வேண்டும். இன்னும் சிலர் அசைவம் சாப்பிடுபவர்கள் இந்த சீசன் வந்துவிட்டால் அசைவத்தை அப்படியே விட்டுவிட்டு பலாக்கொட்டைகளையும் பலாவில் செய்யும் பதார்த்தங்களையும் அந்த சீசன் முடியும் வரை விரும்பி சாப்பிடுவதைக் காண முடியும்.

எடை குறைய:

பலாக்காயில் கலோரி குறைவு. அதனால் இரண்டு கப் பலாக் காயை தினசரி சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறைவதைக் காணலாம். இரண்டு சப்பாத்தியை விட, ஒரு கப் சாதத்தை விட இரண்டு கப் பலாக்காய் எடை குறைப்பிற்கு வழிகாட்டுகிறது.

சர்க்கரை நோய் கட்டுப்படும்:

பலாக்காயில் நன்மை தரும் கார்போஹைட்ரேட் இருப்பதால், இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் குறையும்:

நன்மை தரும் நல்ல கொழுப்புச் சத்து, புரதம் போன்றவை இருப்பதால் உடலின் கொலஸ்ட்ரால் அளவு வெகுவாக குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
விலங்குகளில் அதிக சோம்பேறித்தனமான 10 விலங்குகள் தெரியுமா?
Raw Jackfruit

குடல் நோய் தீர:

பலாக்காயில் நார்ச்சத்து உள்ளதால் குடல்களின் இயக்கம் மேம்பட்டு குடல் நோய்கள் உண்டாகாமல் தடுக்கப்படுவதுடன், மலக்குடல் தொடர்பான நோய்களையும் போக்கி, மலக்குடல் புற்று நோய் ஏற்படுவதையும் தடுப்பதில் பலாக்காய் பெரும்பங்கு வகிக்கிறது.

பசியைப் போக்கும் பலாக்காய்:

பலாப்பழம் மற்றும் பலாக்காயில் வைட்டமின் சி,ஏ, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம் முதலான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. பலாக்காய் கொண்டு தயாரித்த உணவுகளை உண்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வும் தவிர்க்கப்படும். பலாக்காய் பசி தாங்கும் நல்ல உணவாக செயல்படுகிறது. அதனால் பசி உணர்வையும் களைப்பையும் போக்குகிறது.

பலாக்கொட்டை:

இதை சிலர் வறுத்து சாப்பிடுவதைக் காணலாம். அதில் இருக்கும் புரதமானது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் ஒரு சிலருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும். ஆதலால் பலாக்கொட்டைகளை குழம்பு வகைகளில் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுகின்ற பொழுது குறைந்த அளவே சாப்பிடுவோம். அப்பொழுது இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். சிறு குழந்தைகளுக்கு அளவுக்கு மேல் கொடுக்காமல் இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கப்படும் கோபெஷ்வர் மகாதேவ் மந்திர் - பின்னணி என்ன ?
Raw Jackfruit

பலாப்பழம்:

பலாப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. காரணம் என்னவென்றால் 60 மில்லி கிராமுக்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளை முடிந்த வரை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். 150 மில்லி கிராமுக்கு மேல் அதிகரிக்கும் உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படியும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராமல் பின் விளைவுகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளி ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் இருந்தால் அவர் உண்ணும் உணவைப் பொறுத்து அதன் அளவு கூடிவிடும். அப்படி பார்த்தால் பலாவில் அதுபோல் சர்க்கரையை கூட்டிவிடும் பண்பு உள்ளது. 100 முதல் 150 மில்லி கிராம் வரை சர்க்கரையை அதிகரிக்கும் என்பதால் பலாப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இது போல காரணகாரியங்களை புரிந்து கொண்டு பலாவை சமைத்து சாப்பிட்டால் பிரச்சனை இன்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com