ரோஸ்ஷிப் என்பது ரோஜா புஷ்ஷின் பழம். ரோஜாக்களை புதரில் விடப்பட்டால் அவை பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு கோளப் பழங்களை விட்டுச் செல்கின்றன. இது பல மருத்துவ நன்மைகள் கொண்டது. உங்கள் தோட்டத்தில் ரோஜா செடிகள் இருந்தால் அவற்றில் சிலவற்றைப் சீரமைக்காமல் விட்டு விடுங்கள். ரோஸ்ஷிப் அறுவடை செய்து பழங்களை உடைக்கவும். இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்து உள்ளது. மேலும், ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலங்கள் உள்ளன.
ரோஸ்ஷிப் எண்ணெயின் நன்மைகள்: ரோஸ்ஷிப்பில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சையை விட அதிக வைட்டமின் சி சத்து உள்ளது. அதிக ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டது. ஃப்ரீரேடிகல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வறண்ட சருமத்தைத் தடுக்கிறது. சரும சுருக்கங்களைக் குறைக்கிறது.
தழும்புகள் மற்றும் வடுக்களை இது நீக்குகிறது. சூரிய பாதிப்பைக் குறைத்தல் மற்றும் ஹைப்பர் பிக்மெண்டேஷனைக் குறைக்கிறது. இந்த எண்ணெய் கீல்வாதம் மற்றும் மூட்டு வலிக்கும் சிறந்த தீர்வாகும். இதில் உள்ள ஆன்தோசயானின் மற்றும் பாலிஃபினால்கள் வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கிறது.
இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது சிறந்த வலி நிவாரணியாகத் திகழ்கிறது. இதில் உள்ள லைகோபீன் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாகும். சருமத்தை ஃப்ரீரேடிகல்களிலிருந்து காக்கிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்பு இருப்பதால் முகப்பரு பிரச்னை உள்ளவர்களுக்கும் சிறந்தது. இது சிறந்த ஆஸ்ட்ரின்ஜென்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.
இதனுடைய ஊட்டச்சத்துக்கள் சருமப் பொலிவை மேம்படுத்துகின்றன. இதில் உள்ள சிட்ரோனெல்லோல் வயதான அறிகுறிகளையும, முகச் சுருக்கங்களையும் போக்குகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி அதன் வெளிப்புற அடுக்குகளிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. சருமத்தை பிரகாசமாக வைக்கிறது. கொலாஜனை அதிகரிக்கச் செய்கின்றது. சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
மேலும், உடல் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. சருமத்திற்கு வேண்டிய இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இயற்கையான நச்சுத்தன்மையற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டவற்றையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு ரோஸ்ஷிப் எண்ணெய் மிகச் சிறந்தது. இனி உங்கள் அழகுக் குறிப்பில் ரோஸ்ஷிப் எண்ணெய்யும் இருக்கட்டும்.