வேப்பங் கொழுந்தில் (Tender Neem Leaf) இருக்கும் வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகள்!

Neem
Neem
Published on

இந்திய கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பாகமாக இருந்து வந்துள்ளது வேப்பிலை. இதை வாயில் போட்டு மெல்வது, வேப்ப மர குச்சியால் பல் துலக்குவது என வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களையும் உடலின் ஏதாவது ஒரு நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். நம் பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பிலும் இது சேர்க்கப்பட்டு வந்தது. வேப்பிலையிலிருந்து கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், சருமம் பளபளப்பு பெறவும், கோடை காலத்தில் சக்தியின் அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும். கல்லீரலில் இருந்து நச்சுக்களை நீக்கும் செயலில் வேப்பிலை சிறந்த முறையில் உதவி புரிகிறது.

2. நம் ஒவ்வொருவரின் உடலுக்கும் ஒரு தனித்துவமான வாசனை உண்டு. நாம் கொழுந்து வேப்பிலைகளை உட்கொள்ளும்போது, அது நம் உடலின் இயற்கையான வாசனையை மாற்றியமைத்து வேறொரு புது வாசனை வரும்படி செய்துவிடும். இந்த புது வாசனை கொசுக்களை நம்மிடம் நெருங்க விடாமல் விரட்டிவிடும். வேப்பிலை ஓர் இயற்கை முறை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

3. சம்மரின் ஆரம்ப நிலையில் வேப்பங் கொழுந்தை உட்கொள்வதால், வானிலை மாற்றத்தினால் உண்டாகும் தொற்று நோய்கள் மற்றும் சரும நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

4. வேப்பங் கொழுந்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். அதனால் சருமத்தில் வெடிப்பு மற்றும் பருக்கள் தோன்றும் அபாயம் தடுக்கப்படும்.

5. வெயில் காரணமாக சருமத்தில் எரிச்சல், தடிப்பு, கட்டிகள் போன்றவை உண்டாகும்போது வேப்பங் கொழுந்தை தண்ணீரில் ஊறவைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீது வைக்கலாம். அதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்ட்டீரியல் குணங்கள் சருமத்திற்கு குளிர்ச்சி தந்து எரிச்சல் அடங்க உதவி புரியும்.

6. கோடை வெப்பம் ஜீரணத்தைப் பாதிக்கும். வேப்பிலை, ஜீரணத்திற்கு உதவும் என்ஸைம்களின் உற்பத்தி அளவைப் பெருகச் செய்து இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால், வயிற்றுக்குள் வீக்கம், அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் உண்டாவது தடுக்கப்படும். மேலும் குடலிலிருக்கும் தீங்கு தரும் புழுக்களை அழிக்கவும் வேப்பிலை உதவும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களை குறி வைக்கும் நோய்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கும் வேப்பிலை...!
Neem

7. அவ்வப்போது சிறிது வேப்பங் கொழுந்தை உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும்.

8. வேப்பங் கொழுந்தை வாயில் போட்டு நிதானமாக மென்று விழுங்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும். வாய்க்குள் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும், ஈறுகள் தொற்று நோய்க் கிருமிகளால் பாதிப்படையாமல் ஆரோக்கியமாய் இருக்கவும் வேப்பங் கொழுந்து உதவி புரியும்.

9. சம்மர் வெப்பம் உடலில் பித்தத்தை அதிகரிக்கச் செய்யும் என ஆயுர்வேதம் கூறுகிறது. வேப்பங் கொழுந்தின் குளிர்ச்சி தரும் குணமானது உடலுக்குள் வெப்பத்தின் அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். இதனால் உடல் சோர்வடையாது. அதிகளவு வியர்வை மற்றும் வேனல் கட்டிகள் வருவது தடுக்கப்படும்.

வேப்பங் கொழுந்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து, அதிலிருந்து சிறு சிறு உருண்டைகள் செய்து, மூன்று உருண்டைகளை வெறும் வயிற்றில் வாயில் போட்டு விழுங்கி விடலாம். அல்லது, இரண்டு மூன்று மெல்லிய இணுக்குகளை வாயில் போட்டு மென்றும் விழுங்கலாம்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
பல் வலியா? சொத்தையா? வாய் துர்நாற்றமா? புதினா வேப்பங்குச்சி பல்பொடி பெஸ்ட்!
Neem

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com