
சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு. அதை சமாளித்து பேச முடியாமல் திண்டாடுபவர்கள் பலர் உண்டு. அதற்கு எளிமையாக வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கப்படும் பல்பொடிகள் மற்றும் வாய் கொப்பளிக்கும் முறை போன்றவற்றால் வாயில் நாற்றம் மற்றும் பல்வலி வராமல் காக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? அது பல்லுக்கு எப்படி உறுதி தருகிறது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் காலை வேளையில் எழுந்தவுடன் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து அந்த எண்ணெய் வெள்ளை நிறமாக மாறும்போது துப்ப வேண்டும். அது போல் தினசரி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நன்றாக மாறுவதைக் காணலாம்.
பல்வலி இருக்கும்போது வலி உள்ள இடத்தில் பூண்டை நைசாக அரைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வைத்தால் வலி மெல்ல குறைவதை உணர முடியும்.
ஒரு ஸ்பூன் சீரக பொடியுடன் இரண்டு துளி தேன் கலந்து அதை தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும். அந்த தண்ணீரை கொண்டு தினம் இரண்டு முறை வாயை கொப்பளித்து வர நாற்றம் குறைவதைக் காணலாம்.
கருவேலம்பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பல்பொடியில் சிறிது உப்பு கலந்து உபயோகப்படுத்தினால் ஈறு கெட்டி படும். பல் சொத்தை ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
புதினா கீரையை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் மற்றும் பல் கூச்சம் குறையும். அதேபோல் இரண்டு டம்ளர் தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்த புதினாவை போட்டு நன்றாக சூடாக்கி , ஆற விட்டு வாய் கொப்பளிக்க வாயில் உள்ள துர்நாற்றம் படிப்படியாக குறைவதை பார்க்கலாம். புதினா இலையை சுத்தம் செய்து நன்றாக காய வைத்து அதோடு கொஞ்சம் வேப்பங்குச்சியை நன்றாக நசுக்கி பொடித்துப் போட்டு சிறிது உப்பும் சேர்த்து பல்பொடி செய்து வைத்துக்கொண்டு தினசரி அந்த பொடியால் பல் தேய்த்து வந்தால் துர்நாற்றம் மறையும். வேப்பங்குச்சியும் சேர்த்து வருவதால் பல் பளிச்சென்று இருப்பதோடு, பல் சம்பந்தமான வியாதியும் வராமல் தடுக்கும்.
மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் சம பங்கில் கலந்து வாரம் ஒரு முறை பற்கள் தேய்த்து வர பல் வியாதிகள் குணமாகும். பற்களும் பளிச்சிடும்.
அதேபோல் பன்னீருடன் எலுமிச்சைச் சாறு கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் மறைவதை உணர முடியும்.
ஏலக்காய், கிராம்பு, போன்றவற்றை அடிக்கடி மென்று வந்தாலும் பல்வலி குணமாவதுடன் வாயில் வரும் நாற்றத்தை நன்றாக போக்க முடியும். மற்றவர்களுடன் பேசும் பொழுது வாயில் கையை வைத்து மறைக்காத படிக்கு பேசலாம்.
நார்த்த இலையைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த நீரை ஆறவிட்டு இளம் சூடாக இருக்கும் பொழுது வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம், பல் ஈறுகளில் உள்ள வலி பாதிப்பு குறைவதைக் நன்றாக உணர முடியும்.
இதுபோல் இயற்கை மற்றும் எளிமையான முறையை கையாண்டு பல் வலி, பல் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கி பல் ஆரோக்கியம் காக்கலாம் .