சமீப காலமாக அரிசிக்கு பதிலாக கம்பு, குதிரைவாலி, தினை, கேழ்வரகு, பனி வரகு, வரகு போன்ற பல வகை சிறு தானிய வகைகள் மக்களிடையே புழக்கத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவற்றை சாதமாகவும், டிபன் வகைகளாகவும் செய்து உண்பதுடன் முறுக்கு போன்ற சுவைமிகு ஸ்நாக்ஸ்ஸாகவும் செய்து கொடுத்து குழந்தைகளுக்கும் சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். இம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்பட அவற்றிலுள்ள ஊட்டச் சத்துக்களே காரணம் எனலாம். இவ்வகை சிறு தானியங்களில் ஒன்றான வரகு (Kodo Millet) அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வரகு அரிசி குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இது இரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாது. மேலும், இதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக உண்ண ஏற்ற உணவாகிறது வரகு சாதம். க்ளுட்டன் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மற்றும் சீலியாக் நோய் உள்ளவர்கள் உண்ணுவதற்கும் ஏற்ற உணவு இது.
வரகில் கொழுப்பு மற்றும் கலோரி அளவு மிகவும் குறைவு. வரகு நம் குடலில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு ஊட்டம் அளிப்பவை. வரகரிசி சாதம் அடிக்கடி உண்பவர்களுக்கு உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம். இதிலுள்ள பாலிஃபினால் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் உண்டாகும் செல் சிதைவுகளைத் தடுத்து நிறுத்துகின்றன; மூளை செல்கள் சிதைவடைந்தால் உண்டாகும் ஞாபக மறதி, மனச்சோர்வு மற்றும் தூக்கக் கோளாறு போன்ற நோய்களின் வருவதும் இதனால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை நீக்கவும் உதவுகின்றன.
வரகில் உள்ள நியாசின், தயாமைன், ரிபோஃபிளவின் போன்ற வைட்டமின் சத்துக்கள் மற்றும் மினரல்கள் உடலில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவ்வாறான பல வகை ஆரோக்கிய நன்மைகள் தரும் சிறு தானிய வகைகளை அனைவரும் உண்போம்; ஆரோக்கியம் பெறுவோம்.