நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தை அடைய பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அந்த அளவிற்கு நமது வாழ்க்கை முறை மாறி வருகிறது. எனவே ஆரோக்கியதை அடைய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த வகையில், தினசரி நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நட்ஸ் வகைகள் நமது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அள்ளி தருபவை. இதில் வால்நட் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதில் இருந்து தயாரிக்கப்படும் வால்நட் எண்ணெயின் மகிமை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிய பதிவுதான் இது.
தினசரி உண்ணும் உணவுகளில் நாம் பயன்படுத்தும் எண்ணெய், வால்நட் எண்ணெயாக இருந்தால் நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். அதனால் வால்நட் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது நல்லது.
வால்நட் எண்ணெயின் நன்மைகள்
இருதய ஆரோக்கியம்
வால்நட் எண்ணெய், இருதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. அதாவது இருதய ஆரோக்கியத்திற்கு தேவையான அதிக அளவு ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), ஒரு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதில் உள்ளது. எனவே இது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற இருதய சிக்கல்களைத் தடுப்பதாக ஆய்வில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த வால்நட் எண்ணெய் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக நோய் போன்ற நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இந்த எண்ணெயை உட்கொள்வது (மூன்று மாதங்களுக்கு 15 கிராம் / நாள்) இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் தினசரி உணவில் இதை சேர்த்துக்கொள்வது உங்கள் நீரிழிவு மேலாண்மைக்கு உதவும் பயனுள்ள வழியாகும்.
மூளை ஆரோக்கியம்
இதயத்தை பாதுகாக்கும் பண்புகளுக்கு அப்பால், மூளையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் வால்நட் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) மூளையின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. நியூட்ரியன்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, இது நினைவாற்றல், அறிவாற்றல் திறன்கள் மற்றும் மனநிலையை ஆதரிக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் இதில் கணிக்கப்பட்டுள்ளது.
அழற்சிக்கு சிறந்த தீர்வு
ஜர்னல் ஆஃப் ஃபங்க்ஷனல் ஃபுட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, நாள்பட்ட அழற்சி, குறைந்த தர வீக்கத்தின் தொடர்ச்சியான நிலை, இதய நோய், மூட்டுவலி மற்றும் நீரிழிவு உட்பட பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகிறது.
ஆரோக்கியமான எடை
பொதுவாகவே எண்ணெய் எடை மேலாண்மைக்கு வழிவகுக்கும் என்பர். ஆனால் வால்நட் எண்ணெய் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். இது உடல் எடையைக் குறைக்க அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கும்.
சரும ஆரோக்கியம்
வறண்ட அல்லது உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் சருமத்திற்கு தீவிரமான நீரேற்றம் கிடைக்க இயற்கையான பொருட்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் சருமப் பராமரிப்பில் வால்நட் எண்ணெயைச் சேர்ப்பது நல்லது. ஆக மொத்தம் இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
மேலும் வால்நட் எண்ணெயை மேற்பூச்சாகவோ அல்லது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகவோ தவறாமல் பயன்படுத்துவது, முதுமையின் வெளிப்படையான அறிகுறிகளைக் குறைக்கவும் ஒளிரும் சருமத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
கேசத்தின் ஆரோக்கியம்
வால்நட் எண்ணெய் ஒரு இயற்கையான முடி பராமரிப்புப் பொருளாகும். இது உங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை முடியின் அடர்த்தி மற்றும் அளவை மேம்படுத்த உதவியாக இருக்கும். இந்த எண்ணையை வைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் அல்லது ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.