நாம் நம் உடல் உறுப்புகளில் ஏற்படும் எந்தவிதமான உடல் கோளாறுகளுக்கும் நிவாரணம் பெற இரசாயனக் கலப்பற்ற இயற்கை வைத்திய முறைகளையே நாடும் போக்கு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நம் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வால்நட் ஷெல் (ஓடு) மிகவும் உதவிகரமாக உள்ளது என்பது சமீபத்திய தகவல்.
வால்நட் ஷெல்லில் முடிக்கால்களை வளப்படுத்தக்கூடிய வைட்டமின்களும் மினரல்களும் அதிகம் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி முடியை ஆரோக்கியமாய் வைக்க உதவுகின்றன.
வால்நட் ஷெல்களை அரைத்துப் பொடியாக்கி தலையின முடியில் தடவி விட, அந்தப் பொடியானது மெதுவாக அங்கு சேர்ந்திருக்கும் இறந்த செல்களை உரித்தெடுக்கவும் சருமத்தின் மீதுள்ள சிறு சிறு கட்டிகளை நீக்கவும் செய்யும். இச்செயலால் அங்கு இரத்த ஓட்டம் சீராகி முடி நன்கு வளர முடிகிறது.
வால்நட் ஷெல் பவுடரில் உள்ள ஒரு வகை கூட்டுப்பொருளானது முடியின் வேர்களையும் தண்டுகளையும் வலுவடையச் செய்கிறது. இதனால் முடி உடைவதும், முடியின் நுனியில் பிளவு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது முடி மேலும் வலுப்பெறும்.
இந்தப் பவுடரை உபயோகித்து தலை முழுக்க மசாஜ் செய்தால் தலைக்கு கூடுதல் இரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் முடிக்கால்களைச் சுற்றியுள்ள நுண்ணறைகளுக்கு அதிக ஊட்டச் சத்துக்கள் கிடைத்து முடி வளர்ச்சி அதிகமாகவும் வேகமாகவும் நடைபெற வாய்ப்புண்டாகும்.
வால்நட் ஷெல் பவுடரில் இயற்கையாகவே முடிக்கு கருமை நிறம் தரும் குணம் உள்ளது. இதை உபயோகிப்பது, வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் ஹேர் டைக்கு மாற்றாக ஒரு இரசாயனக் கலப்பில்லாத இயற்கையான பொருளை உபயோகித்த திருப்தி தரும்.
வால்நட் ஷெல் பவுடர், தேங்காய் எண்ணெய், தேன் மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி முடியின் வேர்க்கால் முதல் நுனி வரை மாஸ்க்காகப் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விட்டால் முடி பட்டுப்போல் பளபளப்பும் மென்மையும் பெறும்.
உங்கள் வழக்கமான ஹேர் கேர் முறையில் வால்நட் ஷெல் பவுடரையும் சேர்த்துக்கொள்ளும் முன், சரும மருத்துவரையும், முடியியல் நிபுணரையும் கலந்தாலோசிப்பது நலமாகும்.