வீட் கிராஸ் ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!
வீட் க்ராஸ் (Wheat Grass) எனப்படும் கோதுமைப் புல்லில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் அருந்துவது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சமூக ஆர்வலர்களிடையே தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. வீட் க்ராஸ் ஜூஸ் கோதுமைப் புல்லின் இளம் தளிர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வீட் க்ராஸில் வைட்டமின் A, C, E, இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட அநேக ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிளவனாய்ட் மற்றும் க்ளோரோபில் (Chlorophyll) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தீங்கு விளைவிக்கும் ஃபிரிரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி உடல் ஆரோக்கியம் காக்க உதவுகின்றன. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி புரிந்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வீட் க்ராஸ் ஜூஸ் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் கல்லீரலுக்கு உறுதுணையாய் இருந்து ஊக்கப்படுத்தி நச்சுக்களை முழுவதுமாக உடலிலிருந்து வெளியேறச் செய்கிறது. இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்கின்றன. இதனால் உடலுக்கு தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், நோய்களை குணமாக்கவும் கூடுதல் பலம் கிடைக்கிறது.
வீட் க்ராஸ் உடலில் காரத்தன்மை (Alkalizing) உண்டுபண்ணும் குணம் கொண்டது. இக்குணமானது pH அளவை சமநிலைப்படுத்தவும் அசிடிட்டியை குணப்படுத்தவும் உதவுகிறது.
இத்தகைய மேலான நன்மைகள் கொண்ட வீட் க்ராஸ் ஜூஸை நாமும் அவ்வப்போது அருந்தி உடல் ஆரோக்கியம் பெறுவோம்.