எங்கள் சிறு வயதில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்து பாலை வீட்டிற்குக் கொண்டு வந்து தருவார்கள். அக்காலத்தில் கடைகளில் பசும் பால், எருமைப் பால் முதலானவை கிடைக்காது. மேலும், வீட்டிலேயே நெய்யையும் காய்ச்சித் தருவார்கள். சில சமயங்களில் அவர்கள், ‘அம்மா… மாடு கன்னு போட்டிருக்கு. இந்தாங்க கடும்பால்’ என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதை எங்கள் அம்மா கேக் போல வேக வைத்துத் தருவார்கள். சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். சீம்பாலைத்தான் அவர்கள் கடும்பால் என்று அழைப்பார்கள். சீம்பால் என்றால் என்ன அது நமக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
பசு கன்று ஈன்றதும் முதல் மூன்று நாட்கள் சுரக்கும் பால் சீம்பால் (colostrum) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலானது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் காணப்படும். இதில் நோய் எதிர்ப்பு சத்து, புரதச் சத்து, வைட்டமின் ஏ, தாதுச் சத்துக்கள் அதிக அளவிலும், கொழுப்புச் சத்து குறைந்த அளவிலும் காணப்படும். தமிழ்நாட்டில் இது கடும்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
சீம்பாலில் குளோபுலின் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது. சாதாரண பாலை விட சீம்பாலில் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. குளோபுலின் மற்றும் இரும்புச்சத்து கன்றுகளுக்கு அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கிறது. சாதாரண பாலை விட சீம்பாலில் சுமார் எட்டு மடங்கு வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க இதுவும் உதவுகிறது.
தாய்ப்பால் குழந்தைக்கு எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறதோ அது போலவே, சீம்பால் கன்றுகுட்டிக்கு நோய் எதிர்ப்பு சக்தியோடு பலவிதமான நன்மைகளையும் செய்கிறது. கிராமப்புறங்களில் கன்று குடித்தது போக மீதம் கிடைக்கும் சீம்பாலை குடும்பத்தினர் அருந்துவர். விரும்பிக் கேட்பவர்களுக்கு வழங்குவர். சீம்பால் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
மூன்று நாட்களுக்குப் பின்னர் சுரக்கும் பால் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். சாதாரண பாலில் காணப்படும் சத்துக்களை விட சீம்பாலில் பதினைந்து சதவிகிதம் அதிக சத்துக்கள் காணப்படுகிறது. ஒரு பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்களில் சராசரியாக சுமார் நாற்பது லிட்டர் அளவிற்கு சீம்பாலைச் சுரக்கும்.
சீம்பால் செரிமானத்தை அதிகப்படுத்தும் சக்தி படைத்தது. சாப்பிட்ட உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்யும் ஆற்றலும் சீம்பாலுக்கு உண்டு. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் சீம்பாலுக்கு உண்டு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் இப்பால் உதவுகிறது.
சீம்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் அதை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் பால் திரியும். அதைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூளைக் கலந்து கிளற வேண்டும். வெல்லம் சீம்பாலோடு கலந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது நோய் எதிர்ப்பு சத்து மிக்க சீம்பால் இனிப்பு தயாராகிவிட்டது.
சீம்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் சீம்பாலை கருப்பட்டி ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு கொதிக்க வைத்து அருந்துகின்றனர். மேலும், இதை ஆவியில் வேக வைத்தும் சாப்பிடுகின்றனர்.
கிராமப் புறங்களில் சீம்பாலை விரும்பிக் கேட்பவர்களுக்கு இலவசமாகத் தரும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், தற்காலத்தில் சீம்பாலை விற்பனை செய்கின்றனர். வெளிநாடுகளில் இதன் மகத்துவத்தை அறிந்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றனர்.
வாய்ப்பு கிடைத்தால் சீம்பாலை சாப்பிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் மேம்படும்.