
அப்போதெல்லாம் எல்லோர் வீடுகளிலும் அரிசி நனைத்து ஊறப்போட்டிருப்பார்கள். குழந்தை முதல் பெரியவர் வரை யாராவது ஒருவர் அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அப்படியே சாப்பிடுவார்கள். "இப்படி அரிசியை சாப்பிட்டால் கல்யாணத்தின்போது மழை வரும் போ" என இளம்பெண்களை எச்சரித்ததும் உண்டு. இதன் காரணம் என்ன என்று ஆராய்வதை விட சமைக்காத அரிசி சாப்பிடும் பழக்கம் நன்மை தருமா என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சமைக்காத அரிசியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் இருப்பதாலேயே இப்பழக்கம் குறித்து எவரும் அச்சப்படுவதில்லை. உலகம் முழுவதும் சமைத்த அரிசி ஒரு முக்கிய உணவாக இருந்தாலும், சமைக்காத அரிசியை தினமும் உட்கொள்ளும்போது பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம். நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இந்தப் பழக்கத்தின் பக்க விளைவுகளைப் புரிந்துகொண்டால் இதன் மீதான விழிப்புணர்வு வரும்.
சில முக்கிய பக்க விளைவுகள் இங்கே:
பச்சை அரிசி ஜீரணிக்க கடினமானது. மேலும் அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வயிற்று வலி, வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
சமைக்கப்படாத அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா இருக்கலாம். இதை அதிகமாக உட்கொள்ளும்போது உணவு விஷம், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
சமைக்காத அரிசியை சாப்பிடுவதால், உடல் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல், இரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
அரிசியை மெல்லுவது வாயில் உள்ள பற்சிப்பிக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது காலப்போக்கில் பற்களில் துவாரங்கள் மற்றும் உணர்திறன் அபாயத்தை அதிகரிக்கும்.
சமைக்காத அரிசியில் ஆர்சனிக் என்ற நச்சுப் பொருள் இருக்கலாம்; இது நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
மேலும் பசிக்கும் போது அரிசி எடுத்து சாப்பிடும் ஏக்கம் இருப்பது பைக்கா கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் அரிசி சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியைக் குழப்பக்கூடும். மேலும், இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும்.
தினமும் அரிசி சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியை எதிர்மறையாக பாதிக்கும் என்கின்றனர். ஆன்டிநியூட்ரியண்ட்களை உள்ளடக்கியதால் அரிசி சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.
இதனால் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை ஏற்படும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், தாமதமான சுழற்சிகள் அல்லது மாதவிடாய் தவறுதல் போன்ற பாதிப்பு வரலாம்.
ஆகவே ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பைப் பராமரிக்க அரிசியை தொடர்ந்து சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
சிறு வயதிலேயே சமைக்காத அரிசி சாப்பிடும் பழக்கத்தை முறியடிக்க, உணவுமுறை மாற்றங்களைச் செய்வது, இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதுடன் சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது. ஊட்டச்சத்து நன்மைகளை அதிகரிக்கவும் தேவையற்ற உடல்நல அபாயங்களைத் தவிர்க்கவும் எப்போதும் நன்றாக சமைத்த அரிசியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.