
வயதான பின் வரும் உடல் அசதி, சோர்வு, ஞாபகமறதி போன்றவை தற்போதெல்லாம் 30+ பெண்களுக்கே வந்து விடுகின்றன. அந்த உடல்நலக் குறைவுடனே உடலுக்கு தேவையான ஓய்வின்றி மருத்துவ கவனிப்பும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பர். இதையெல்லாம் தவிர்க்க அவர்கள் அவசியம் செய்ய வேண்டியதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இல்லத்தரசிகள் ரெகுலராக ஹெல்த் செக்கப் (House wives health) செய்து கொள்ள வேண்டும். அப்படியே ஏதாவது உடல்நலம் பிரச்னைகள் என்றாலும், மருத்துவ காப்பீடு, அரசு மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் உடல்நலக் குறைவை கவனித்து சரி செய்து கொண்டோமானால், முதுமையில் நலமாக இருக்கலாம்.
உடல்நலக் குறைவு வராமல் தடுக்க, இல்லத்தரசிகளுக்கான (House wives health) சில வீட்டு குறிப்புகள்:
1. வேலை அவசரத்தில் நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை என்றால், காலை வெறும் வயிற்றில் நீராகாரம் சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் வராமல் தடுக்கும்.
2. கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் காலையில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்குக்கு முன்பும், பின்பும் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும்.
3. பழைய சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட உடல் வலுப்பெறும். மோர் ஊற்றி சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும்.
4. தொப்புளைச் சுற்றி தேனைத் தடவிட உஷ்ண வலி, வயிற்று வலி குணமாகும்.
5. சீரகத்தை வறுத்துப் பொடி செய்து அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட நன்கு தூக்கம் வரும்.
6. பேரீச்சம் பழத்தை அப்படியே அல்லது கூழாக்கியோ பாலில் கலந்து சாப்பிட பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் கை, கால் மூட்டு வலி சரியாகும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம்பழம் சாப்பிட குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
8. மதிய வேளையில் தேனை வெந்நீரில் கலந்து அருந்த உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
9. கஞ்சியில் வெந்தயத்தை கலந்து சாப்பிட வயிற்று வலி, நீர்ச்சுருக்கு குணமாகும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
10. பெண்கள் பிரசவ காலத்திற்கு முன்பிருந்தே துளசிச் சாறை பருகி வர சுகப்பிரசவம் ஏற்படும்.
11. உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவிட்டு அதை தண்ணீருடன் மறுநாள் பருகி வர மாதவிடாய் கோளாறுகள், மலச்சிக்கல் தீரும்.
12. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து அதில் நெய், கொஞ்சம் சீரகம் கலந்து குடிக்க இடுப்பு வலி, குதிகால் வலி சரியாகும்.
13. கேரட் சாறும், தேனும் பருகி வர கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பித்த மயக்கம், வாந்தி கட்டுப்படும்.
14. தக்காளி சாறை அடிக்கடி பருகி வர உடல் வனப்பு கூடும்.
15. மாதுளம்பழச் சாற்றை தினமும் அருந்தி வர சருமம் இளமையாகவும், பொலிவோடும் இருக்கும். இவ்வாறு பல விதங்களில் பயன் தரும் எளிய வீட்டு குறிப்புகளை பின்பற்ற உடல்நலம் மேம்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)